72 மணி நேரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அலகை நிறுவி குஜராத் பால் நிறுவனம் சாதனை!

Update: 2021-04-27 12:43 GMT

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அறை கூவலை அடுத்த பல தொழிலதிபர்களும் தொழிற்சாலைகளும் இந்த சூழலை சமாளிக்க உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

டாடா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மருத்துவத் தேவைக்கான திரவ ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கி உள்ள நிலையில் சிறு, குறு மற்றும் அரசு நிறுவனங்களும் கூட தங்களால் இயன்ற வகையில் உதவி வருகின்றன. குஜராத்தில் பானஸ்கந்தா மாவட்டத்தில் இயங்கி வரும் பானஸ் பால் நிறுவனம் அங்குள்ள அரசு மருத்துவமனை மற்றும் நிறுவனம் நடத்தி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவ மூன்றே நாட்களில் ஒரு ஆக்சிஜன் உற்பத்தி அலகை கட்டமைத்துள்ளது.

இந்த திரவ ஆக்சிஜன் உற்பத்தி அலகு ஒரு நாளுக்கு 680 கிலோ கிராம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக் கூடிய திறன் கொண்டது என்றும் இதனால் ஒரு‌ நாளில் 35 முதல் 40 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. பானஸ் பால் நிறுவனம் ஒரு‌ மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை. நடத்தி வருவதோடு பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையையும் நிறுவனத்தின் அறக்கட்டளை பரமாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது போக பானஸ் அரசு மருத்துவமனை மற்றும் பாலன்பூர் அரசு மருத்துவமனைக்கும் ஆக்சிஜன் வழங்கப்படும் என்று பால் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. மேலும் பானஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நாளில் 480 கியூபிக் மீட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் அலகையும் பானஸ் பால் நிறுவனம் அமைத்துள்ளது.

Similar News