அகத்தியருக்கு முதல் கோவில்- கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம் !
சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்குப் பயணப்பட்டு அதைச் சமன்செய்தார்.
கோவை உப்பிலிபாளையம் ராமசாமி நகரில் அகத்தியருக்கு முதல் கோவில்கட்டப்பட்டு கும்பபிஷேக விழா இன்று நடத்தப்பட்டது.
அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்குப் பயணப்பட்டு அதைச் சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினைத் தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழைச் சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர் என்றும் கருதப்படுகிறது.
அகத்திய முனிவர் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்திய போது, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்று கருதப்படுகிறது. மேலும் அகத்தியரை பற்றி பல்வேறு சிறப்புகளை தமிழ் இலக்கியங்கள் மூலம் நாம் அறிய முடிகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த அகத்தியருக்கு கோவையில் அகத்திய மகரிஷி திருக்கோயில் என்று புதிதாக கோவில் ஒன்று கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அகத்திய மகரிஷி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கும்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : Dinamalar