2 ஆயிரம் சாட்டிலைட் போன்கள்.. 2 மாத திட்டம் - இம்மி பிசிறாமல் காஷ்மீர் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரம்மிப்பூட்டும் பின்னணி!

2 ஆயிரம் சாட்டிலைட் போன்கள்.. 2 மாத திட்டம் - இம்மி பிசிறாமல் காஷ்மீர் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரம்மிப்பூட்டும் பின்னணி!

Update: 2019-08-06 12:11 GMT

காஷ்மீருக்கு சிறப்பு குழு:


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் சட்டப்பிரிவுகளை நீக்க வேண்டும் என்று மோடியும், அமித்ஷாவும் முடிவு செய்து அதற்காக தனிக்குழு ஒன்றை உருவாக்கினார்கள்.அந்த குழுவில் பல்வேறு துறை உயர் அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் இடம் பெற்று இருந்தனர். மத்திய அமைச்சரவை பதவி ஏற்றதுமே இந்த குழுவின் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. ஜூன் 1-ந்தேதி உள்துறை பொறுப்பை ஏற்றுக்கொண்ட அமித்ஷா முதல் 2 வாரங்களுக்கு 370, 35ஏ சட்டப்பிரிவுகளை நீக்கினால் எத்தகைய சட்ட பிரச்சினை எழும் என்று ஆலோசித்தார். சட்ட பிரச்சினைகள் வந்தால் சமாளிக்க முடியும் என்று சட்ட நிபுணர்கள் உறுதி அளித்ததும் அமித்ஷாவின் அடுத்த நடவடிக்கைகள் தொடங்கின. அதன்படி ஜூன் 26-ந் தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம் மேற்கொண்டார். அவருடன் உளவுத்துறை தலைவர் அரவிந்த்குமார், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா உள்பட பல உயர் அதிகாரிகள் சென்றனர். அவர்கள் மூலம் காஷ்மீர் நிலவரம் ஆய்வு செய்யப்பட்டது.


வியூகம் அமைத்து கண்காணிப்பு:


இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து உயர் அதிகாரிகளை காஷ்மீருக்கு அமித்ஷா அனுப்பினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் காஷ்மீரில் சுமார் ஒரு வாரம் தங்கி இருந்து சில முன் ஏற்பாடுகளை செய்தார். அதே கால கட்டத்தில் ராணுவ தளபதிகளும் காஷ்மீரில் முகாமிட்டு இருந்தனர். அனைத்து உளவுப்பிரிவு அதிகாரிகளும் காஷ்மீரை மையமாக கொண்டு செயல்பட்டனர். கடந்த மாதம் முழுவதும் அதிகாரிகள் முற்றுகையில் காஷ்மீர் இருந்தது.


முன் எச்சரிக்கை நடவடிக்கை:


அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் காஷ்மீரில் எத்தகைய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டது. படை குவிப்பு, ஆளில்லா விமானம், 2 ஆயிரம் சாட்டிலைட் போன்கள் ஆகிய 3 வகையான முன் ஏற்பாடுகள் மூலம் காஷ்மீரை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வியூகம் வகுக்கப்பட்டது.அதன்படி முதலில் சுமார் 40 ஆயிரம் ராணுவத்தினர் கூடுதலாக காஷ்மீருக்குள் தரை இறக்கப்பட்டனர். வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இரண்டே நாளில் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.


2 ஆயிரம் சாட்டிலைட் போன்கள்:


அடுத்து காஷ்மீர் மாநிலத்தின் தகவல் தொடர்பு, இணைய தள சேவை, தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய அனைத்தையும் துண்டித்தனர். இணைய தள சேவை துண்டிக்கப்பட்டதால் காஷ்மீர் மக்களின் தகவல் பரிமாற்றம் முற்றிலுமாக முடங்கியது. அதே சமயத்தில் அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள 2 ஆயிரம் சாட்டிலைட் போன்கள் டெல்லியில் இருந்து அனுப்பப்பட்டன.அந்த 2 ஆயிரம் சாட்டிலைட் போன்கள் உதவியுடன் ராணுவம், போலீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உத்தரவுகளை பிறப்பித்து செயல்பட்டனர். இதன் மூலம் மிக சாதுரியமாக, மிக திறமையாக மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர்.


அரசு அதிகாரிகளுக்கே தெரியாத திட்டம்:


இதன் மூலம் காஷ்மீரில் அசம்பாவிதம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடக்காது என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகே நேற்று அதிரடியாக சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிக்கப்பட்டது.இந்த திட்டங்கள் அனைத்தும் காஷ்மீரில் உள்ள உயர் அரசு அதிகாரிகளுக்கு கூட தெரியாமல் எடுக்கப்பட்டதாகும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த மாதம் 22-ந்தேதி அமெரிக்காவுக்கு சென்றபோது காஷ்மீர் பிரச்சினையை கையில் எடுத்து பேசினார். அதன் பிறகுதான் இனி தாமதிக்க கூடாது என்று மோடியும், அமித்ஷாவும் 10 நாட்களுக்குள் தங்கள் திட்டத்தை அதிரடியாக நிறைவேற்றி உள்ளனர்.



Similar News