அயோத்தி : ராமர் கோயில் பூமி பூஜைக்கு தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்படும் செங்கற்களும், புனித தீர்த்தங்களும்.!

நாடு முழுவதிலும் இருக்கும் பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து மண்ணும் தீர்த்தங்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

Update: 2020-08-01 10:18 GMT

500 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5-இல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், RSS தலைவர் மோகன் உட்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர். கொரானா வைரஸ் பரவல் காரணமாக 200 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் சமூக விலகல் உரியமுறையில் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் கருவறைக் கட்ட மிகப் பெரிய வெள்ளி செங்கற்களை வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 1990களில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஸ்ரீராம் என அந்தந்த மாநில மொழிகளில் பதிக்கப்பட்ட செங்கற்கள் அயோத்திக்கு வண்டி வண்டியாக அனுப்பி வைக்கப்பட்டன என்பதை நாம் நினைவு கூறலாம். இம்முறையும் அவ்வாறே செல்கிறது, ஆனால் தங்கம் மற்றும் வெள்ளி செங்கல்கள்.

ராமர் கோவிலை கட்டி வரும் அறக்கட்டளை இவ்வாறு தங்க மற்றும் வெள்ளி செங்கற்களை அனுப்ப வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக அதற்குரிய பணத்தை அறக்கட்டளைக்கு நிதி உதவியாக வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

பக்தர்களின் அன்புக்கு தடையேது? நாடு முழுவதிலும் இருந்து வெள்ளி மற்றும் தங்க செங்கற்கள் அனுப்பிவைக்கப்பட்ட வண்ணம் உள்ளன. தமிழ் நாட்டில் 18 கிலோ அளவு எடை உடைய ஒரு வெள்ளிச் செங்கல் சேலத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க மற்றும் RSS தன்னார்வ ஆர்வலர்களிடம் இருந்து இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அங்க வஸ்திரங்களும், புனிதமான கொள்ளிட மண்ணும், ஸ்ரீராம் என்று பெயர் பொறிக்கப்பட்ட தங்க செங்கல்லும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோக கும்பகோணம் மகாமகம் புனித குளத்தில் இருந்து பலவிதமான பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 



நாடு முழுவதிலும் இருக்கும் பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து மண்ணும் தீர்த்தங்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியால் ஒரு லட்சத்து 11 ஆயிரம் லட்டுகள் ராமபிரானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிறகு பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும். பின்னர் நாட்டில் இருக்கும் பெரிய கோவில்களுக்கு பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அன்று ராமாயணத்தின் மீதும், ராமபிரானின் மீதும் இரண்டு தபால் தலைகள் வெளியிடுவார் என்றும் டைம்ஸ் சதுக்கத்தில் புகழ்பெற்ற இராம பிரானின் திரு உருவப் படமும், ராமர் கோவிலின் மாதிரி புகைப்படமும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் இந்துக்கள் இந்த முயற்சியை எடுத்து வருகிறார்கள். ஆகஸ்ட் ஐந்தாம் நாள் ஹிந்து வரலாற்றில் ஒரு மிகப் பெரியப் பொன்னாளாக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. சொல்லி வைத்தார் போல பாகிஸ்தான் இதை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது.

http://epaper.deccanchronicle.com/articledetailpage.aspx?id=15015332

Similar News