பாரத மாதாவிற்கு கோவில் திறப்பு- திரளானோர் பங்கேற்பு !
"பாரத் மாதா கீ ஜெய்" முழக்கங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை இந்த கோவில் திறக்கப்பட்டது.
குஜராத் தலைநகர் காந்திநகரில் பாரத மாதாவிற்கு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இந்திய வரைபடத்தின் பின்னணியில் சிங்கத்தின் மேல் அமர்ந்து கையில் காவிக்கொடி வைத்திருப்பதைப் போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. "பாரத் மாதா கீ ஜெய்" முழக்கங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை இந்த கோவில் திறக்கப்பட்டது.
இந்த கோவில் திறப்பு விழாவின் போது திரளான மக்கள் இந்த கோவிலில் கூடி வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக பங்கேற்ற துணை முதல்வர் நிதின் பட்டேல் "பாரத மாதா நம் அனைவருக்கும் சொந்தமானவர். அவர் எந்த குறிப்பிட்ட சமூகத்திற்கோ அல்லது சாதிக்கோ சொந்தமானவர் அல்ல. இந் வகையில் நான் பார்த்த முதல் கோவில் இதுவாக இருக்கலாம் " என்று தெரிவித்தார்.
இந்த பாரதமாதா கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் படேல், இனிமேல் அரசு சார்பாக கட்டப்படும் பாலங்கள், நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களில் பாரத மாதாவின் சுவரொட்டிகளும் உருவங்களும் இருக்கும் என்று அறிவித்தார். இது போன்ற முதல் சுவரொட்டி காந்திநகரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலங்களில் ஏற்கனவே ஒட்டப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) ஏற்பாடு செய்த இந்த விழாவில் பட்டேல் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை மற்றும் மாநிலத்தை அச்சுறுத்தி வரும் லவ் ஜிகாத் குற்றங்கள், அவற்றை தடுப்பதற்காக மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் போன்றவை குறித்து ஆவேசமாக பேசினார்.
இந்த விழாவில் மாநில உள்துறை இணை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜாவும் கலந்து கொண்டு பேசினார். அப்போது "வலிமை, வழிபாடு மற்றும் ஆற்றலுக்கான மையம் இன்று திறக்கப்பட்டுள்ளது. பாரத மாதாவை பிரார்த்தனை செய்யும் போது தேசபக்தி உணர்வு நம் நரம்புகளில் பாய்கிறது" என்று அவர் கூறினார். மாநிலத்தின் முதல் பாரத மாதா கோவில் கட்டும் முயற்சியை மேற்கொண்ட விஎச்பிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இந்த கோவில் பல தரப்பு மக்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடைகளின் உதவியுடன் விஹெச்பியால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.