பித்ரு சாபம் நீக்கும் பீஷ்மாஷ்டமி

பித்ரு சாபம் நீக்கும் பீஷ்மாஷ்டமி அன்று புனித நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்பவர்களின் எண்ணிக்கை ஏராளம் இன்றைய தினம் பீஷ்மருக்கான தர்ப்பணமும் நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால் சுகமான வாழ்வு நிச்சயம் அமையும் என்பது ஐதீகம்

Update: 2023-01-27 11:15 GMT

மகாபாரத யுத்தகளத்தில் அம்புகளால் துளைக்கப்பட்ட நிலையில் அம்பு படுக்க மீது கிடந்தார் பீஷ்மர். அவர் தன் தந்தையிடம் இருந்து விரும்பியபடி மரணிக்கும் வரத்தை பெற்றிருந்தார். ஆனால் விரும்பிய நேரத்தில் மரணிக்கலாம் என்று பீஷ்மரால் தன்னுடைய இறப்பை தள்ளிப் போட முடியவில்லை. ஏனெனில் அவருடைய உடல் வேதனையில் துடித்தது. அப்போது அங்கு வந்த வியாசரிடம் "நான் செய்த பாவம் என்ன ?எதற்காக என் உடல் இவ்வளவு வேதனையில் இருக்கிறது? நான் விரும்பிய நேரத்தில் மரணிக்கலாம் என்ற என் தந்தையின் வரத்தின் படி நான் நினைத்தபோது என்னால் மரணிக்க முடியாதபடி இந்த வேதனை என்னை அச்சுறுத்துகிறதே" என்று பீஷ்மர் கேட்டார். அதற்கு வியாசர் "பீஷ்மா ஒருவர் தன் மனதாலும், உடலாலும் ஒருவருக்கு செய்வது மட்டுமே தீமை , அநீதி இல்லை . நம் முன்பாக ஒரு கெட்ட செயல் நடக்கும் போது அதனை தடுக்காமல் இருப்பதும் கூட பாவம் தான். அதற்கான தண்டனையையும் அந்த நபர் அனுபவித்தே ஆக வேண்டும். நீ அனுபவிக்கும் வேதனை அப்படிப்பட்ட ஒரு தண்டனைக்குரியதுதான்" என்றார்.


இப்போது பீஷ்மருக்கு புரிந்து விட்டது. துரியோதன சபையில் பாஞ்சாலிக்கு அநீதி நிகழ்ந்த போது அதனை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவு இது என்பதை அவர் உணர்ந்தார்.பின்னர் வியாசரிடம் இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று கேட்டார். "யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ, அப்போதே அந்த பாவமகன்று விடும் என்கிறது வேதம் .


நீ எப்போது வருந்தினாயோ அப்போதே அந்த பாவம் அன்று விட்டது. ஆனாலும் துரியோதனன் அவையில் பாஞ்சாலி காப்பாற்றும் படி கதறியபோது கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன் செவிகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள், நீ சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற நிலையிலும் தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் அளப்பரிய வீரம் இருந்தும் உபயோகமின்றி இருந்த உன் வலுவான தோள்கள், வாள் எடுத்து எச்சரிக்காத உன் கைகள், இருக்கையில் இருந்து எழாமல் இருந்த உன் கால்கள், நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்க தவறிய உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்பது விதி. அதைத்தான் இப்போது அனுபவிக்கிறாய்" என்றார் வியாசர்.


பின்னர் "உன்னுடைய வேதனையை சுட்டெரிக்க சூரியனின் அனுகிரகம் தேவை என்று கூறிய வியாசர் தன்னிடம் இருந்த எருக்க இலைகளை கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார்.இதனால் அவரது வேதனையை குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி அடைந்த பீஷ்மர், தியான நிலையிலே முக்தி அடைந்தார். அவர் மரணித்த தினம் ரதசப்தமி.


அதற்கு அடுத்த நாளான அஷ்டமி திதி 'பீஷ்மாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது. "பீஷ்மர் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார்? "என்று தருமர் வருந்தினார். அப்போது வியாசர் "ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும், பித்ருக்கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர் சொல் தவறாத நேர்மையாளர் , தூய்மையானவர் .வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த தேசமே பித்ரு கடன் செய்யும். அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவார்" என்றார் .அந்த தினமே பீஷ்மாஷ்டமி என்று அனுஷ்டிக்கப்படுகிறது.

Similar News