கால்கள் கட்டி,வாய்கள் மூடி கொண்டு செல்லப்பட்ட 18 கன்றுகள் உயிரிழப்பு-10 பேர் கைது!
ஏற்கனவே இந்த பகுதியில் 38 குரங்குகள் மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது
கர்நாடகாவில் சட்டவிரோதமாக கன்றுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது 18 கன்றுகள் உயிரிழந்த சம்பவத்தில் கர்நாடகாவில் உள்ள ஹசன் காவல்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த பகுதியில் 38 குரங்குகள் மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்னும் இடத்தில் ஒரு சிறிய சரக்கு வாகனத்திற்குள் 50க்கும் மேற்பட்ட கன்றுகளை கால்கள் மற்றும் வாய்களைக் கட்டி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி எடுத்து சென்றுள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின்கம்பத்தில் மோதியதால் வாகனத்தில் கொண்டு சென்ற 18 கன்றுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.
கன்றுகள் உயிரிழந்ததால் வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வாகனம் மின் கம்பத்தில் மோதிய சம்பவம் நடந்த பேலூர் தாலுகாவில் உள்ள தியவப்பனஹள்ளி கிராம மக்கள் காயமடைந்த கன்றுகளை மீட்டு கன்றுகளின் கால் மற்றும் வாயில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து அவற்றை பராமரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் காவல்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நூருல்லா, சலீம், சபீர், அகமது, அத்புல் முபாரக், புருஷோத்தம், சுல்தான், ஆரிப், இர்பான் மற்றும் ஜீவன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளனர்.
முன்னதாக ஜூலை 28 அன்று, ஹசன் மாவட்டத்தில் 38 குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மர்ம நபர்கள் குரங்குகளை பைகளில் அடைத்து சாலையோரத்தில் வீசிச் சென்ற நிலையில் உள்ளூர் இளைஞர்கள் பைகளைத் திறந்தபோது முப்பத்தி எட்டு குரங்குகளின் சடலம் இருந்தது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Source : Hindupost