அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஆதிகேசவ பெருமாள் கோவில்- அரசாணையை திரும்பப் பெற்றுக் கொள்ள ஒப்புதல் !
பதில் மனு தாக்கல் செய்த அறநிலையத்துறை கோவிலை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதாக விடுக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
சென்னை ஆதிகேசவ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது மூவிலை அரசு கட்டுப்பாட்டில் எடுக்க விடுக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இந்து அறநிலையத்துறை சென்னை ஆதிகேசவ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் 5 பேர் மீது 27 குற்றச்சாட்டுகளை கூறி நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஐந்து பேரையும் இடைநீக்கம் செய்தது. இந்த ஐந்து பேரில் இருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர். இரண்டு பேர் ராஜினாமா செய்து விட்டனர். இந்நிலையில் இது தனியார் கோவில் என்பதால் இந்து அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என்று கூறி அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பதில் மனு தாக்கல் செய்த அறநிலையத்துறை கோவிலை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதாக விடுக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது. 12 ஆண்டுகளாக கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை விற்பதில் ஊழல் இருப்பதாக புகார் வந்ததாலேயே அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
ஆனால் அறங்காவலர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்ததாகவும் ஆனால் அறநிலையத்துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் ஊழல் நடந்ததாக கூறப்படும் நில விற்பனை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும் ஏற்கனவே இந்த கோவிலை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று முயற்சித்தபோது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வைகானச ஆகமத்தை பின்பற்றி செயல்படும் இந்த கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசுக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி இந்த வழக்கில் அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரினார். அப்போது தான் வழக்கறிஞராக இருக்கும்போது இந்த வழக்கில் ஆஜரானதாகவும் எனவே இந்த வழக்கில் இருந்து தற்போது நான் விலகிக் கொள்வதாக தெரிவித்து இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.