ஆகம விதிப்படியே இனி அர்ச்சகர்கள் நியமனம் - வழிக்கு வந்த அமைச்சர் !

தமிழகத்தில் உள்ள கோசாலைகள், குளங்கள், தேர்கள் போன்றவற்றை பராமரிக்க வேண்டும் என்றும் இது குறித்தான குறைகளை இந்து அறநிலையத்துறை நிவர்த்தி செய்ய உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Update: 2021-08-11 12:05 GMT

ஆகம விதிப்படி 207 பேர் அர்ச்சகர்களாக பயிற்சி பெற்றுள்ளதாகவும் முறையான ஆகம விதிப்படி அவர்கள் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட உள்ளனர் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 207 பேர் பயிற்சி பெற்று உள்ளதாகவும் அவர்களில் 75 பேர் 35 வயதை கடந்தவர்கள் என்றும் முதலில் 35 வயதுக்குள் இருப்பவர்கள் பணி நியமனம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுப்பதற்காக புதிய சட்டம் கொண்டு வருவதற்காக முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருவதாகவும் இதற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து வரவேற்புகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள கோசாலைகள், குளங்கள், தேர்கள் போன்றவற்றை பராமரிக்க வேண்டும் என்றும் இது குறித்தான குறைகளை இந்து அறநிலையத்துறை நிவர்த்தி செய்ய உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதுவரை 80 கோவில்களுக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பல கோவில்களை ஆய்வு செய்து குடமுழுக்கு விழா நடைபெறாமல் இருக்கும் கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்டங்கள் கொண்டு வருவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: தினமலர்

Image courtesy:  Dinamalar

Tags:    

Similar News