2019 இடைக்கால பட்ஜெட்டுக்கு அருண் ஜெட்லி புகழாரம் - பல்வேறு அரசியல் தலைவர்களின் ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள்! #Budget2019

2019 இடைக்கால பட்ஜெட்டுக்கு அருண் ஜெட்லி புகழாரம் - பல்வேறு அரசியல் தலைவர்களின் ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள்! #Budget2019

Update: 2019-02-01 12:09 GMT
இன்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டுக்கு அமெரிக்காவுக்கு சென்றுள்ள மத்திய மூத்த அமைச்சர் அருண்ஜெட்லி தனது பாராட்டை தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
2019 -2020-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.
5 ஏக்கருக்கு உட்பட்ட சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6000 வழங்க உள்ளதாக அறிவித்தார். ₹6,000 உதவி திட்டம் மூலம் ₹12 கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறும் என்றும், சிறிய விவசாயிகளுக்கு உதவ ₹75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ₹2.5 லட்த்தில் இருந்து ₹5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
சிறப்பான, தரமான பட்ஜெட் - அருண் ஜெட்லி புகழாரம்
பியூஷ் கோயல் தாக்கல் செய்துள்ளது சிறப்பான, தரமான பட்ஜெட் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு பட்ஜெட்டும் நடுத்தர மக்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலேயே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.  
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா
விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளதாக பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். விவசாயிகள் மேலும் கடன் வாங்காத அளவுக்கு ஆண்டு உதவித்தொகை திட்டம் உதவும் என்று தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலான வரலாற்று சிறப்பு வாய்ந்த பட்ஜெட் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
நாங்கள் வாக்கு வங்கிக்காக அரசியல் நடத்தவில்லை. வளர்ச்சிக்கான அரசியலேயே செய்கிறோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நிலையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல எங்களை அர்ப்பணித்துள்ளதாக தெரிவித்தார்.
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் குறைவானது என்றார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
இது ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் அளிக்கப்படும் என்ற காங்கிரசின் அறிவிப்பை நகல் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை  
ஆண்டு வருமானம் ₹5 லட்சம் என்றால் வரிவிலக்கு என்பது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பானதால் வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வசதியான வாழ்க்கை முறையை அனைவரும் பெற வேண்டும் என்ற வகையில் மத்திய இடைக்கால பட்ஜெட் உள்ளததாகவும் அவர் தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
இடைக்கால பட்ஜெட்டை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் விவசாயிகளுக்காக போடப்பட்ட திட்டங்கள் பல மாநிலங்களில் செயல்படும் திட்டங்களின் நகலாகும்.  
தமிழக அமைச்சர் ஜெயக்குமார்
மீனவர் நலனுக்காக மீன்வளத்துறை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு மீனவர்கள் வாழ்நாளில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்
வாக்குகளை வாங்க வார்த்தை ஜாலம் நிறைந்த காகிதப்பூ மாலையாக மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது என்றும் தனிநபர் வருமான வரி விலக்கு ₹5 லட்சமாக உயர்த்தி இருப்பது ஆறுதலாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
இந்திய மக்களுக்கு பொய்மாலையை மத்திய பட்ஜெட் சமர்ப்பித்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட பட்ஜெட்டாக உள்ளது.

Similar News