சபரிமலை அருகே 4000 கோடியில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி!
சபரிமலை அருகே எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, சபரிமலையில் விமான சேவையும் தொடங்கப்பட உள்ளது. சபரிமலை அருகே கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் அரசு, தனியார் பங்களிப்பில் 2,250 ஏக்கர் பரப்பளவில் ரூ.4,000கோடியில் விமான நிலையம் கட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின்பல்வேறு துறைகளிடம் கேரள அரசு தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு துறை ஏற்கெனவே முதல்கட்ட அனுமதியை வழங்கிவிட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்து துறையும் சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘சபரிமலை அருகே புதிதாக பசுமை விமான நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.4,000 கோடி மதிப்பில் 2,250 ஏக்கர் பரப்பில் அரசு, தனியார் பங்களிப்பு திட்டத்தில் புதிய விமான நிலையம் கட்டப்படும். கேரள அரசின் தொழில் வளர்ச்சி கழகம், விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சபரிமலை அருகே எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி கோரி மத்திய விமான போக்குவரத்து துறையிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ‘டேபிள்டாப்’ விமான பாதையை தவிர்க்கவேண்டும் என்று விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. இதன்படி, கூடுதலாக 301 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம் ஓடுபாதையின் நீளம் 3.4 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டது.