"ஜகந்நாதர் நிச்சயம் எங்களை மன்னிப்பார்" உருக்கத்துடன் பூரி கோவில் தேரோட்டத்துக்கு தடை விதித்த நீதிபதிகள்!

"ஜகந்நாதர் நிச்சயம் எங்களை மன்னிப்பார்" உருக்கத்துடன் பூரி கோவில் தேரோட்டத்துக்கு தடை விதித்த நீதிபதிகள்!

Update: 2020-06-19 03:30 GMT

இந்தியாவில் உள்ள கோவில்களில் நடக்கும் தேரோட்ட நிகழ்ச்சிகளில் மிகவும் பெரியது பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 3 பிரம்மாண்ட தேர்கள் வலம் வரும். உலகெங்கும் இருந்து பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற்பர். 13 நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் விழா பல நூற்றாண்டுகளாக தடை இல்லாமல் நடைபெற்று வந்தது.

இந்த ஆண்டும் விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

வரும் ஜூன்  23-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரள்வார்கள், மேலும் இலட்சக்கணக்கானோர் கூடும் இந்த விழாவை இந்த ஆண்டு நடத்தக் கூடாது என பொதுநலன் கோரும் மனு ஒன்றை ஒடிசா விகாஸ் பரிஷத் எனும் பொது நல நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் "நாடு முழுவதும் 3.6 இலட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தினமும் பல்லாயிரக்காணக் கணக்கோருக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே மக்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான தேர் திருவிழாவை தடை செய்வதாகவும், இந்த தடை உத்தரவு பிறப்பிப்பதற்காக பூரி ஜகன்னாதரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், நிச்சயம் அவர் மன்னிப்பார்" என்று கூறி உருக்கத்துடன் தீர்ப்பளித்தனர். இதை அடுத்து தேர் திரு விழா இந்த ஆண்டு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரிசாவிலுள்ள இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும் பின்னர் ஒருவாறு சமாதானம் அடைந்துள்ளனர்.

சென்ற மே மாதம் முதல்வார நிலவரப்படி மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப உள்துறை அமைச்சகம் தேர் சக்கரங்களை தயார் செய்யும் பணிக்கு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News