விடுதலைப் போராட்டத்தின் முப்பெரும் தலைவர்களில் ஒருவரான பால கங்காதர திலகரின் பிறந்த தினம் இன்று!

விடுதலைப் போராட்டத்தின் முப்பெரும் தலைவர்களில் ஒருவரான பால கங்காதர திலகரின் பிறந்த தினம் இன்று!

Update: 2020-07-23 02:51 GMT

"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்" என்று முழங்கிய பால கங்காதர திலகரின் பிறந்த தினம் இன்று. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முப்பெரும் தலைவர்களான பால், லால், பால் (Lal, Bal, Pal) ஆகியோர்களில் ஒருவராவார். மற்ற இருவர் பிபின் சந்திர பால் மற்றும் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் ஆகியோராவர். லோகமான்ய திலகர் அதாவது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்று மக்களாலும், Father of Indian unrest என்று பிரிட்டிஷ் அதிகாரிகளாலும், 'நவீன இந்தியாவை உருவாக்கியவர்' என காந்தியாலும் அழைக்கப்பட்டார்.

அவர் வாழ்க்கையையும், பங்களிப்பையும் குறித்து இன்று நினைவு கூர்வோம். அப்போதைய பம்பாய் மாகாணத்தில், ரத்தினகிரி மாவட்டத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் கேஷவ கங்காதர திலகர் ஆக பிறந்தார். தன் அன்னையால் பாலா என அன்புடன் அழைக்கப்பதால் தன் பெயரின் முன்னால் அதை சேர்த்துக் கொண்டார். தன் பதினாறு வயதிற்குள் தந்தையை இழந்தவர், கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.முதுகலைப் படிப்பை படிப்பை பாதியில் விட்டுவிட்டு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று சட்டப் படிப்பை தொடர்ந்தார். பிறகு ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக தொடர்ந்த அவர் தன்னுடன் வேலை பார்த்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் தொடர்பாக வேலையை விட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளர் ஆனார். தன் கல்லூரி நண்பர்கள் சிலருடன் இணைந்து ஒரு பள்ளியைத் தொடங்கினார். இந்திய தேசிய சிந்தனைகளுடன் சேர்ந்த நல்ல படிப்பை இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த பள்ளி உருவானது. அந்த பள்ளியின் வெற்றியை தொடர்ந்து 'டெக்கான் கல்வி சமூகம்' என்ற அமைப்பை உருவாக்கி அந்நிறுவனங்கள் விரிவடைந்தன. இதைத்தொடர்ந்து இந்திய தேசிய விடுதலைக்காகவும் பாடுபடத் தொடங்கினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில், காந்திக்கு முன்பாக நாடு முழுவதும் அறியப்பட்ட தலைவர் திலக் ஆவார்.1890ல் அவர் காங்கிரஸில் இணைந்தார். பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியாவிற்கு முழு சுயராஜ்யம் வேண்டும் என்று அறிவுறுத்தியதால் அவர் காங்கிரஸில் தீவிர தேசியவாதியாக அறியப்பட்டார்.

இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் 1897-ல் புனேவில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு தன்னுடைய 'கேசரி' பத்திரிக்கையில் வெறுப்பு பேச்சுக்களின் மூலம் தூண்டி விட்டதாகவும், கொலைகாரர்களின் அடையாளத்தை மறைத்து வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு பாலகங்காதர திலகருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறை தண்டனை முடிந்து அவர் வெளியே வந்தபோது அவர் ஒரு தியாகியாகவும் ஒரு கதாநாயகனாகவும் பார்க்கப்பட்டார். அந்நிய நாட்டில் உற்பத்தி செய்த பொருட்களை புறக்கணிக்கவும், நம் சொந்த நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்வதற்கான சுதேசி இயக்கத்தை ஆதரித்தார். அன்னிய பொருட்களை உபயோகப்படுத்தும் யாரையும் இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1907-இல் நடந்த காங்கிரஸ் தேசிய மாநாட்டில் மிதவாதம், தீவிரவாதம் என இரண்டாக காங்கிரஸ் கோஷ்டி பூசல் உண்டானது. திலகர் மிதவாத பிரிவை சேர்ந்த கோபால கிருஷ்ண கோகலேவை எதிர்த்தார். திலகரின் ஆதரவாளர்களாக விபின் சந்திர பால், வ உ சிதம்பரம் பிள்ளை, லாலா லஜபதி ராய், அரபிந்தோ கோஷ் ஆகியோர் இருந்தனர்.

1909-இல் பிரிட்டிஷிடம் இருந்து இந்தியாவை பிடிப்பதற்காக 'பிரிவினைவாதம்' பேசிய குற்றத்திற்காகவும், இந்தியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே இனவாதத்தை தூண்டிய கட்டுரைகளை எழுதிய குற்றத்திற்காகவும் ஆறு வருடங்கள் பர்மாவில் உள்ள சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து 1914 இல்-வெளிவந்த பொழுது திலகர் உடலாலும் மனதாலும் மிகவும் சோர்ந்து போயிருந்தார். தனது சிறைவாசத்தின் போது சக்கரைநோய் வந்ததால் மிகவும் அவதியுற்ற்றார். காந்தியை அகிம்சை வழியை கைவிடுமாறும் இந்தியாவின் சுயராஜ்ஜியம் அடைய என்ன வழிகள் தேவைப்படுமோ அவை அனைத்தையும் பின்பற்றுமாறும் வற்புறுத்தினார். காந்தி அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்தாலும், திலகரின் இது மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். ஒரு ஆங்கிலேயருக்கு எதிரான வழக்கில் திலகர் தோல்வியுற்று கடனாளியாக ஆனபோது Tilak Purse Fund என்ற ஒன்றை ஆரம்பித்து அனைவரையும் நிதி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார் காந்தி.

காங்கிரஸில் உள்ள கோஷ்டிகளை இணைக்க முயற்சி செய்து சலித்துப் போன திலகர், அன்னிபெசன்ட் அம்மையார் உடன் இணைந்து Indian Home Rule Movement என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். கிராமம் கிராமமாக சென்று இந்தியாவில் சுயராஜ்யம் மற்றும் அதற்கான தேவையை வலியுறுத்தி உறுப்பினர்களை சேர்க்க ஆரம்பித்தார்.1916 ஏப்ரலில் 4 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்த அமைப்பு, 1917-இல் 32 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டு விரிவடைந்தது. விவேகானந்தரும், திலகரும் ஒருவர் மீது ஒருவர் பெருமதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். விதவை மறுமணத்தை திலகர் ஆதரித்தார்.

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் போக்கையே மாற்றி அமைத்த திலகர், ஆகஸ்ட் 1,1920 இல்மரணமடைந்தார். 2007-இல் அவருடைய 150-ஆவது பிறந்த நாளை கொண்டாட இந்திய அரசு அவர் நினைவாக ஒரு நாணயம் வெளியிட்டது. பர்மாவில் அவர் இருந்த சிறை பர்மா அரசாங்கத்தால் ஒரு பாட அறையாக மாற்றப்பட்டுள்ளது.

Similar News