கதிர் ஆனந்த்தை தோற்கடிக்க தி.மு.கவினர் சதித்திட்டம்! கலக்கத்தில் துரைமுருகன் புலம்பல்!!

கதிர் ஆனந்த்தை தோற்கடிக்க தி.மு.கவினர் சதித்திட்டம்! கலக்கத்தில் துரைமுருகன் புலம்பல்!!

Update: 2019-08-01 09:54 GMT


வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். தி.மு.க.வினரும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இது ஒருபுறம் இருக்க, கதிர் ஆனந்தை தோற்கடிக்க தி.மு.கவினரே வரிந்து கட்டி வேலை செய்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 


தி.மு.கவில் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அன்பழகன் இருந்தாலும், அவருக்கு வயதாகிவிட்டதால் அவரால் செயல்பட முடியவில்லை. ஆகவே இப்போதைக்கு 2-வது இடத்தில் இருப்பவர் துரைமுருகன்தான். 


ஏனெனில் தி.மு.கவின் அடுத்த பொதுச் செயலாளர் என்ற இடத்தில் துரைமுருகன் உள்ளார். இது நடக்கக்கூடாது என்று தி.மு.கவில் துரைமுருகனுக்கு எதிரான கோஷ்டிகள் களம் இறங்கி வேலை செய்கிறது. 


அவர்கள், உள்குத்து வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது, பண விஷயத்தில் கதிர் ஆனந்தை சிக்க வைத்ததே தி.மு.கவினர்தான் என்கின்றனர், தி.மு.க. மூத்த நிர்வாகிகள்.


இதனுடைய வெளிப்பாடாகத்தான் ஆம்பூரில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த துரைமுருகன், “கதிர் ஆனந்த் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க, சிலர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். எங்கள் வீட்டில் பணத்தை கொண்டு வந்து வைத்து விட்டு வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தது யார்? எங்கள் வீட்டு வேலைக்காரருக்கு செல்போன் வாங்கி கொடுத்தது யார்? என்னுடைய மகன் கதிர் ஆனந்த்தை, லாரி ஏற்றி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது யார்? அந்த துரோகி யார்? என்பது எனக்கு தெரியும்” என்று தி.மு.கவினரின் துரோகத்தை கொட்டி தீர்த்தார்.


கதிர் ஆனந்துக்கு சீட் கொடுத்ததிலும் முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். ஆனால் அதை மீறி சீட் வாங்கிவிட்டார். ஆனால் அதே எதிர்பாளர்கள் வேலூர் தொகுதிக்கு தேர்தலை ரத்து செய்யும் அளவுக்கு திறமையாக காய்களை நகர்த்திவிட்டனர். தி.மு.கவினருக்குத்தான் இது கைவந்த வேலையாச்சே.


இது ஒருபுறம் இருக்க, துறைமுருகனின் கல்லூரியில் இடம் கேட்டு செல்லும் தி.மு.க.வினரை ஒரு பொருட்டாககூட மதித்ததில்லையாம். இது உள்ளூர் தி.மு.கவினருக்கு ஆறாத வடுவாக உள்ளது. அது மட்டுமல்ல தன்னிடம் உதவி கேட்டுவரும் தி.மு.க தொண்டர்களை கேலி செய்து அனுப்புவார் துரைமுருகன் என்றும் உடன்பிறப்புகள் குமுறுகின்றனர்.


இதேபோல, காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயநல்லூர் ரோட்டில் உள்ளது காந்திநகர் கற்பக விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1.17 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றபோது, கோவில் சொத்தை காப்பாற்ற துரைமுருகனிடம் உதவி கேட்டு வந்தனர் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்களான தி.மு.கவினர். ஆனால் அவர்களை கேலி செய்து அனுப்பி வைத்துள்ளார் துரைமுருகன். இது தி.மு.க.வில் உள்ள இந்துகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.


இந்நிலையில், வேலூர் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அலுவலகத்தை முஸ்லிம்களை தாஜா செய்வதற்காக ஆம்பூரில் துரை முருகன் திறந்து வைத்துள்ளார். இதுவும் இந்துக்களை கோபம் அடையச் செய்துள்ளது. “அப்படியானால் கதிர் ஆனந்துக்கு இந்துக்கள் ஓட்டு தேவையில்லை, அப்படித்தானே” என்று தி.மு.கவில் உள்ள இந்துக்கள் நேரடியாகவே கேள்வி எழுப்பி உள்ளனர்.


கதிர் ஆனந்தை தோற்கடிக்க தி.மு.கவினரே பல வழிகளில் களம் இறங்கி வேலை செய்வதை கேள்விப்பட்ட துரைமுருகன் கலங்கி போய் உள்ளார். இந்த தேர்தலில் கதிர் ஆனந்த் தோற்றால், அதோடு துரைமுருகனின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடும். இதனால் அழாத குறையாக புலம்பி வருகிறார் துரைமுருகன்.


Similar News