ஏன் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகளை மீண்டும் திறக்க கூடாது ? காரணங்கள் இதோ !

ஏன் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகளை மீண்டும் திறக்க கூடாது ? காரணங்கள் இதோ !

Update: 2020-04-12 09:26 GMT

சென்னை பத்திரிக்கையாளர் மன்ற மூத்த உறுப்பினரும், 25 ஆண்டுக் காலம் மாலை முரசு பத்திரிகையில் மூத்த பத்திரிக்கையாளராக பணியாற்றியவரும், புகை மற்றும் மதுவுக்கு எதிராக பல சகாப்தமாக போராடி வரும் சமூக ஆர்வலர் M.V இராஜதுரை அவர்கள் கொரோனா காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கீழ் கண்ட ஏற்புடைய காரணங்களை கூறியுள்ளார்:

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து பெருகி வரும் சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம் என்ற முடிவில் உள்ளது உண்மையில் இது நம் சமூக நன்மைக்குதான் என்று கருதுவோம். இந்த சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க மிக சிறப்பான முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருவது பாராட்டத்தக்க ஓன்று. அதில் மிகவும் மிகவும் முக்கியமானது அரசு நடத்தி வந்த டாஸ்மாக் கடைகளை மூடியது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் மது அருந்துபவர்களின் உடல் நிலை நரம்பு தளர்ச்சிக்கு உள்ளாகும், அவர்களின் மன நிலை பாதிக்கப்படும், உயிரிழப்பு ஏற்படும், கள்ளச்சாராயம் பெருகும் என்றெல்லாம் சில வாதங்கள் பலமாக அமைக்கப்பட்டன. ஆனால் நம் தமிழகத்தில் அவ்வாறெல்லாம் நடக்கவில்லை, கள்ளச்சாராயத்தையும் அரசு இந்த நேரத்தில் சிறப்பாக கட்டுப்படுத்துவதாக செய்திகள் வருகின்றன. மேலும் மது இல்லாததால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் தற்போது நிம்மதியாக உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

1967 ஆம் ஆண்டே தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களும் நான் ஏன் சாராயக் கடைகளை திறக்கப் போவதில்லை என்பதற்கான காரணங்களை பட்டியல் இட்டபோது பல அறிவு பூர்வமான சமூக பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் அதில் இருந்தன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 2016 சட்டமன்ற பொது தேர்தல் அறிக்கையில் மதுவால் விளையும் தீமைகளை முன்னிட்டு தனது அடுத்த 5 ஆண்டு ஆட்சி காலத்திற்குள் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவேன் என்றார்.

இப்போது அந்த காலம் நெருங்கியுள்ள நிலையில் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் வழியில் நடைபெற்று வரும் இந்த அரசு மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது.

அவ்வாறு திறந்தால் குடிப்பவர்களின் உழைப்பு, திறமைகள் மீண்டும் பாதிக்கப்படும், அவர்களின் கல்லீரல், சிறுநீரகம் உட்பட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, ஒரு குடும்பத்தின் மருத்துவ செலவுகள் அதிகரிப்பதுடன் ஒருவரால் ஒரு குடும்பமே மிகப்பெரிய பாதிப்பை அடைகிறது.

மதுவால் அரசுக்கு வரும் நன்மை ஒரு ரூபாய் என்றால் மதுவால் நேரும் மருத்துவ செலவு ஒரு குடும்பத்துக்கு 3 ரூபாய் ஆகிறது. இந்த மனிதாபிமான காரணத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் மது அருந்துபவர்களின் குடும்பத்தினரும் பொறுப்பெடுத்துக் கொண்டு மதுவுக்கு அடிமையானவர்களின் மீது அன்பு, பரிவு காட்டி மருத்துவத்தின் துணையுடன் அவர்களை குடும்பத்தின் ஒரு சொத்தாக மாற்றவேண்டும். பொது மக்களுடன் அரசும் பொறுப்பேற்று குடிக்கும் இளைஞர்களை நல்வழிபடுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

இந்த நிலையில் எந்த விதத்திலும் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட அரசு அனுமதிக்கக் கூடாது என மூத்த பத்திரிக்கையாளரும் புகை, மதுவுக்கு எதிரான இயக்கம் நடத்தி வரும் சமூக ஆர்வலருமான M.V இராஜதுரை சமூக ஊடகங்களின் மூலம் அரசுக்கும், பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    



 


Similar News