சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டாக் அமலாக்கம் கட்டாயம் - டிசம்பர் 1-க்கு பதிலாக மாற்றியமைக்கப்பட்ட காலக்கெடு!

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டாக் அமலாக்கம் கட்டாயம் - டிசம்பர் 1-க்கு பதிலாக மாற்றியமைக்கப்பட்ட காலக்கெடு!

Update: 2019-12-02 09:21 GMT

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டாக் அமலாக்கம் கட்டாயமாகும் தேதியை டிசம்பர் 15, 2019-க்கு ஒத்திவைப்பதென மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்தத் திட்டம் டிசம்பர் 1, 2019-லிருந்து தொடங்கப்படுவதாக இருந்தது.


எரிபொருளையும், நேரத்தையும் மிச்சப்படுத்தவும் மாசினைக் கட்டுப்படுத்தவும் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்யவும் தேசிய மின்னணு முறையிலான சுங்கக் கட்டண வசூல் திட்டத்தை சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தொடங்கி உள்ளது. ஆர்.எஃப்.ஐ.டி. தொழில்நுட்ப அடிப்படையில் ஃபாஸ்டாக் மூலம் கட்டணத்தை செலுத்த இந்த முறை வகை செய்கிறது. சுங்கச்சாவடிகளின் இரு தடங்களிலும் ஒரு வழி தவிர மற்றவை ஃபாஸ்டாக் பாதையாக டிசம்பர் 1, 2019-லிருந்து அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.


இருப்பினும் பல்வேறு காரணங்களால் பயணிகளில் பலர் தங்களின் வாகனங்களில் ஃபாஸ்டாக் பொருத்தாதது கண்டறியப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக்கினை வாங்கி தங்களின் வாகனங்களில் பொருத்த பயணிகளுக்கு மேலும் கால அவகாசம் அளிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக் பாதையில் ஃபாஸ்டாக் பொருத்தாத வாகனங்கள் செல்லும் போது டிசம்பர் 1, 2019-லிருந்து இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதற்கு பதிலாக டிசம்பர் 15, 2019-லிருந்து இந்த முறை அமலுக்கு வரும்.


எனவே கட்டணமில்லாமல் ஃபாஸ்டாக் வழங்குவது டிசம்பர் 15, 2019 வரை தொடரும்.


Similar News