சீறி நின்ற 12 ஏவுகணைகள் : அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி? - பிரதமர் மோடி வெளியிட்ட ரகசியம்

சீறி நின்ற 12 ஏவுகணைகள் : அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி? - பிரதமர் மோடி வெளியிட்ட ரகசியம்

Update: 2019-04-22 03:12 GMT

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு பறந்து சென்று, அங்குள்ள பயங்கரவாத முகாம்களை லேசர் குண்டுகளை போட்டு அழித்தன. ஆனால் அதற்கு அடுத்த நாளே (பிப்ரவரி 27-ந் தேதி), பாகிஸ்தான் தனது அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது.


உஷார் நிலையில் இருந்த இந்திய விமானப்படை, அந்த விமானங்களை விரட்டியடித்தது. பாகிஸ்தானின் ‘எப்-16’ ரக போர் விமானம் ஒன்றை சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அதே நேரம், அவரது விமானமும் தாக்குதலுக்கு உள்ளானது. அவரும் சிறை பிடிக்கப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் மார்ச் 1-ந் தேதி அவர் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டார்.


அவர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்ற ரகசியத்தை தனது சொந்த மாநிலமான குஜராத்தில் படான் என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.


இது பற்றி அவர் பேசுகையில், “அபிநந்தன் பிடிபட்ட உடனேயே இது குறித்து நான் உடனே விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. நாங்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினோம். எங்கள் விமானிக்கு ஏதாவது நேர்ந்தால், எங்களுக்கு மோடி இப்படி செய்து விட்டார் என்று நீங்கள் உலகத்துக்கு கூற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என பாகிஸ்தானை எச்சரித்தோம்” என கூறினார்.


மேலும், “இரண்டாம் நாளில் அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர், மோடி 12 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறார். அவற்றைக் கொண்டு அவர் தாக்குதல் நடத்துவார். நிலைமை மோசமாகி விடும் என்று எச்சரித்தார். அதைத் தொடர்ந்துதான் நமது விமானியை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது” என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.


அத்துடன், “ இதை சொன்னது அமெரிக்காதான். அதைப் பற்றி இப்போது நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. நேரம் வரும்போது இதுபற்றி சொல்வேன்” எனவும் அவர் சொன்னார்.


Similar News