பாத்து பேசுங்க… பக்குவமா பேசுங்க கம்யூனிக்கேஷன் அவ்ளோ முக்கியம்

பாத்து பேசுங்க… பக்குவமா பேசுங்க கம்யூனிக்கேஷன் அவ்ளோ முக்கியம்

Update: 2020-01-18 03:23 GMT

நாம் பேசும் பேச்சு, உச்சரிக்கும் சொல் உற்சாகத்தையும் தரும். உணர்வு ரீதியான
காயங்களை கொடுக்கும். நம்மோடு பணியாற்றுபவர், நம் பெற்றோர், உறவினர், நண்பர் என நாம்
தொடர்பிலிருக்கும் மனிதர்களிடம் பேசும் முன், நம் கருத்துக்களை ஏற்று கொள்ளும் விதத்தில் தெரிவிப்பது
அவசியம்.


வாழ்வின் போக்கில் சில கருத்துகளை நாம் கூர்மையாக முன்வைக்க வேண்டிய
சூழல் நிச்சயம் ஏற்படும். நாம் மேற்கொள்ளும் முடிவுகள், அறிவிக்கும்
கருத்துக்கள் சூழ்நிலைக்கு மிகச்சரியானதாக இருந்தபோதும் அவ்விஷயத்துடன்
தொடர்புடையவர்களை காயப்படுத்தக்கூடும். அதற்காக குற்றவுணர்ச்சியில் தவிப்பது, அல்லது சரியான
முடிவுகளை எடுக்க முடியாமல் தயங்குவது என உணர்வு ரீதியான சிக்கல்களை
சந்திக்கிறீர்களோ….. உங்களுக்கான சில குறிப்புகள் இங்கே………..


ஏன் அவர்கள் காயமடைகிறார்கள் என்ற தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்…


நீங்கள் ஏன் அவர்களை காயப்படுத்தினீர்கள் என்ற கேள்விக்கு உங்களிடம்
சரியான பதில் இருந்தால் அவர்களின் வலியை புரிந்து கொண்டு, அதிலிருந்து
அவர்களை மீட்டெடுப்பது சுலபம்.


உதாரணமாக, உங்கள்
அலுவலகத்தின் கடந்த கால வரலாற்றில் ஓர் சூழலுக்கு உங்கள் மேலதிகாரி உங்களை காயப்படுத்தியிருக்கலாம்.
அந்த ஒரே காரணத்திற்க்காக உங்களுக்கு கீழ் பணியாற்றுபவரையும் நீங்கள் அவ்வாரே
கையாள்வீர்கள் எனில் உங்கள் கருத்தும் முடிவுமே சரியானதாக இருக்க வாய்ப்பில்லை.
பழைய கசப்பான நினைவுகளை முன்மாதிரியாக கொள்ளாமல்...தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளை
கடந்து செயல்படுங்கள். உங்கள் கண்டிப்பான குரல் சூழலுக்கு தேவையானது என நீங்கள்
நம்புகிற வேளையில், கண்டிப்பான
தருணங்களுக்கு பின் அவரிடம் சற்று தளர்வாக அவர் செய்த தவறுக்கான இழப்புகளையும், அதை சீர்
செய்வதற்கான யுத்திகளையும் புன்னகையுடன் எடுத்து சொல்லுங்கள்.


உங்கள் கடுமையான வெளிப்பாட்டை தாமதப்படுத்துங்கள்.


பெரும்பாலானவர்கள் மிக விரைவாக எதிர்வினையாற்றிவிடுகிறார்கள். நம்முடைய
பதிலை சொல்ல போதுமான நேரம் இருக்கும் பட்சத்தில் பிறர் செய்த தவறை குறித்து
ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் அவரை தற்சமயம் காயப்படுத்தினால் அது நிரந்தரமான
தீர்வாகுமா என்பது குறித்து சிந்தியுங்கள். உதாரணமாக உங்களை ஒருவர் ஆயுதம் கொண்டு
தாக்க முற்படுகிறார். நீங்கள் தப்பி செல்வீர்களா? அல்லது அந்த ஆயுதத்தின் தாக்குதலுக்கு
ஆட்படுவீர்களா? உங்கள் ‘கடுமையான
எதிர்வினையை’ ஒத்திபோடுவதென்பது தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்க்கு சமம்.


எதிர்வினையாற்றும் முன் சற்று அமைதியடையுங்கள். போதுமான அவகாசம் எடுத்து
நீங்கள் உதிர்க்கபோகும் வார்த்தைகளின் கடுமையை ஆராய்ந்து பாருங்கள். முடிந்தவரை
பிறரை நேரடியாக, உணர்வுரீதியாக, தனிப்பட்ட வகையில்
காயப்படுத்தும் வார்த்தைகளை தவிர்த்திடுங்கள்.


பிரச்சனையிலிருந்து விடுபட்டு சிந்தியுங்கள்.


உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் நிறுவனத்தின் சேவை குறித்து புகார்
தெரிவிக்கும் பட்சத்தில் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டால்…. எதிர்வினையாற்றும்
முன் சிந்தியுங்கள். அந்த கடுமையான வார்த்தைகளும், சொற்களும் தனிப்பட்ட உங்களை தாக்கும் சொற்கள் அல்ல
அது நிறுவனத்தின் தவறான சேவையை சுட்டுவது என்ற புரிதல் நமக்கு தேவை. அதற்கு
எதிர்வினையாற்றும் வேளையில் ஓர் நிறுவனம் எவ்வாறு பதிலளிக்குமோ அந்த
பொறுப்புணர்ச்சியுடன் எந்த தனிப்பட்ட தாக்குதலும் இன்றி உங்கள் பதிலை பதிவு
செய்யுங்கள்.


தீர ஆராயுங்கள்.


ஒருவரை விமர்சிப்பதற்க்கு முன்பாக உங்கள் வார்த்தைகளை ஒரு முறைக்கு
இருமுறை சரி பாருங்கள். நீங்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் உங்களுக்கு ஒவ்வாத
செயல்களிலோ, பேச்சிலோ மற்ற
பிறர் ஈடுபட்டால்…. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டதன் காரணத்தை கேட்டு விளக்கம்
பெற்ற பின்னர் எதிர்வினையாற்றுங்கள்


Similar News