2000 ரூபாய் நோட்டை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.

Update: 2023-05-23 00:00 GMT

2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக கடந்த 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர்-30 ஆம் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வேறு நோட்டு மாற்றுக் கொள்ளலாம் என்று கூறியது. ஒருவர் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகளை மாற்றலாம் என்று தெரிவித்தது. ரூபாய் நோட்டு மாற்றும் பணி 23- ஆம் தேதி தான் தொடங்குகிறது. அதை அறியாமல் இருபதாம் தேதியை ஏராளமானோர் வங்கிகளை முற்றுகையிட்டனர். அவர்களுக்கு வங்கி அதிகாரிகள் விவரத்தை எடுத்துச் சொல்லி அனுப்பி வைத்தனர்.

சில வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் எந்திரம் மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கி கணக்கில் செலுத்தினர். வேறு சிலர் 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி தங்கம் வைர நகைகளை வாங்கினர். 20,000 மதிப்புக்கும் மேற்பட்ட நோட்டுகளுக்கு கே.ஒய்.சி விவரங்களை நகைக்கடை அதிபர்கள் பெற்றுக் கொண்டனர். ஸ்டேட் வங்கி தனது அனைத்து சரக உள்ளூர் தலைமை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளில் உரிய ஏற்பாடுகளை செய்வதுடன் பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதன் மூலம் பொதுமக்கள் சமூகமாக இடையூறின்றி மாற்றிக் கொள்வார்கள். ஒரே நேரத்தில் ரூபாய் 20, 000 வரை மாற்றிக்கொள்ள அடையாள ஆவணமும் வேண்டுகோள் சீட்டும் தேவை இல்லை.

ஒருவரே எத்தனை தடவை வேண்டுமானாலும் வரிசையில் வந்து ஒரு தடவைக்கு ரூபாய் ₹20,000 மதிப்புள்ள நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அதிக அளவிலான 2000 ரூபாய் நோட்டுகளை சொந்த கணக்கில் செலுத்த ரிசர்வ் வங்கி எந்த விதிமுறையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஏற்கனவே உள்ள விதிமுறைப்படி வாடிக்கையாளரின் சுய விவரங்களை கேட்டு பெறலாம் இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

Similar News