"தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்தக் கணமே தமிழகம் மயானம் ஆகிவிடும்" - கிழித்து தொங்கவிட்ட தமிழருவி மணியன்!

"தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்தக் கணமே தமிழகம் மயானம் ஆகிவிடும்" - கிழித்து தொங்கவிட்ட தமிழருவி மணியன்!

Update: 2020-01-13 05:58 GMT


சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி என்றாலே தீண்டத்தகாதது என்று நினைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், 1999 பாராளுமன்ற தேர்தலில், இதே பாரதிய ஜனதா கட்சியுடன்தான் கூட்டணி வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். 1998-இல் முதன்முதலாக ஜெயலலிதா வாஜ்பாய்க்கு ஆதரவு கரம் நீட்டினார். பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணி வைத்தார். 


அப்போது கருணாநிதி பேசிய பேச்சுக்களை எல்லாம் முரசொலி பத்திரிகையிலும் மற்ற பத்திரிகைகளிலும் எடுத்துப் படித்துப் பாருங்கள். ஸ்டாலின் படிக்க மாட்டார். அது எனக்கு  தெரியும். நீங்களாவது படித்து பாருங்கள்.


கருணாநிதியை நான் சந்தித்தபோது ஒருமுறை என்னிடம் “வாசிப்பு என்பது எனது கட்சியில் எவரிடமும் இல்லை” என்றார். அதைவிட சிரித்துக் கொண்டே சொன்னார், “முரசொலியே இவர்கள் படிக்க மாட்டேங்கிறான்” என்றார். “என்னை வந்து சந்திக்கும் அமைச்சர்களையோ, மாவட்டச் செயலாளர்களையோ முரசொலி  படிக்கிறார்களா என்று கேட்பேன். அதற்காக அவர்கள் அன்றைய முரசொலியை மட்டும் படித்து விட்டு வருவார்கள். நான் விடமாட்டேன். அவர்களிடம் நேற்றைய முரசொலியில் நான் எழுதியதை கேட்டால் அவனுக்கு தெரியாது” என்றார்.


அவர்களுக்கு படிக்க ஏது நேரம். கொள்ளை அடிப்பது எப்படி என்பதை கலையாக கற்ற கூட்டம் அல்லவா அது.


மீண்டும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி மட்டும் தமிழகத்தில் அமைந்தால், ரஜினிகாந்த் சொன்னதை நான் மாற்றி சொல்கிறேன், போராட்டங்களால் நாடு சுடுகாடு ஆகும் என்று சொன்னார் அவர். திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்த கணமே மயானம் ஆகிவிடும் தமிழகம்.


2006 முதல் 2011 வரை, அவனவன் சொத்தை அவனவன் காப்பாற்ற முடிந்ததா? சொந்த சொத்தைகூட காப்பாற்ற முடியவில்லையே? சொத்தை இங்கே விட்டுவிட்டு அமெரிக்காவிற்கு சென்று இருப்பான். அவன் திரும்பி வந்து பார்த்தால், அவனது சொத்தில் வேறு எவனோ கட்டிடம் கட்டிக் கொண்டு இருப்பான். ஆயிரம் ஏக்கர் நிலங்களை, நில அபகரிப்பு சட்டத்தின் மூலம் ஜெயலலிதா மீட்டு கொடுத்துள்ளார். ஊரை அடித்து உலையில் போடுவதில் உங்களைவிட தேர்ந்த மனிதர்கள் யாருமே கிடையாது.


திமுகவை ஒப்பு நோக்குகின்றபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பவர்கள் ஓரளவிற்கு அப்பாவிகள். 


சுதந்திர போராட்ட சூழலில் இந்திய தேசிய காங்கிரசில் மிக நீண்ட காலம் பொதுச்செயலாளராக இருந்தவர், ஆச்சார்யா கிருபளானி. நாடு விடுதலை பெற்றபோது இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக அவர்தான் இருந்தார்.


நாட்டு பிரிவினையில் கையெழுத்து போட்டபோது நேரு ஒரு கையெழுத்தும், ஆச்சார்யா கிருபளானி ஒரு கையெழுத்தும்தான் போட்டு இருக்கிறார்கள். அந்த ஆச்சாரியா கிருபளானி, 90 வயதைக் கடந்த பிறகு இங்கே எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது வந்தார். அப்போது கவர்னராக காந்தியவாதி பிரபுதாஸ் பட்வாரி இருந்தார். ஆச்சார்யா கிருபளானியை கவர்னர் மாளிகையில் நாங்கள் சந்தித்தோம்.


அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் பற்றி அவர் கேட்டார். அப்போது ஜனநாயகம் குறித்து ஒரு அற்புதமான விளக்கத்தை அவர் அளித்தார்.


In Democracy we have no choice to choose between good and evil. We have only choice between great evil and lesser evil. இது நல்லது, இது கெட்டது என்று முழுவதுமாக ஒன்றை இந்தப் பக்கமும், ஒன்றை அந்தப் பக்கமும் வைத்து பார்க்க முடியாது. இந்த நிலையில் ஜனநாயகத்தில் நாம் என்ன செய்ய முடியும்? எது சிறிய தீமை என்று பார்த்து, அந்த சிறிய தீமைக்கு வாக்களிப்பதைத்தவிர ஜனநாயகத்தில் வேறு வழி இல்லை என்றார். 


அப்படி பார்க்கின்ற பொழுது, திமுகவைவிட அதிமுக பரவாயில்லை. அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. நண்பர்களே திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை இழந்து 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்களால் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்க முடியாது. அடுத்தவன் சொத்தை சுரண்டாமல் 5 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் செத்தே விடுவார்கள். ஆனால் இப்போது 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால்தான் அவ்வளவு பதட்டம்.


தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பான்மையாக திமுகவினர் வந்து அமர்ந்து விட்டார்கள் என்றால், முடிவெடுத்து விடுங்கள், இனி உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை கோலாகலங்கள் நடக்கப்போகின்றன என்பதை. இவர்கள் எல்லாம் நாட்டிற்கு சேவை செய்யவா வந்தவர்கள்? இவர்களில் ஒருவராவது காந்தி உண்டா? ஒருவராவது காமராஜர் உண்டா? ஒருவராவது கக்கன் உண்டா? 


இந்த ஆட்சி, “கலெக்சன், கமிஷன், கரப்ஷன்” என்று திரும்பத் திரும்ப ஸ்டாலின் சொல்கிறார். இந்த கலெக்சனையும், கமிஷனையும், கரப்சனையும் தமிழகத்தில் அறிமுகம் செய்தவர்களே நீங்கள் தானே?


இதை நீங்கள் பேசலாமா? 


காமராஜர் இருந்தால் பேசலாம். கக்கன் இருந்தால் பேசலாம். வாசன் பேசலாம். பொன்.ராதாகிருஷ்ணன் பேசலாம். தமிழருவி மணியன் பேசலாம். நீங்கள் பேசக் கூடாது.


தமிழ்நாட்டில், நிர்வாகத்துறையில் ஆட்சித் துறையில் எந்த ஊழல் எப்படி பிறந்தது என்று ஆய்வு செய்தால், அது தொடங்குகிற இடம் கோபாலபுரமாகத்தான் இருக்கும். கோபாலபுரத்தில் இருந்து தொடங்கி பிறகு அது ராமாவரம் தோட்டம் சென்று கொஞ்சம் பெரிதாக மாறி, ராமாவரம் தோட்டத்தில் இருந்து போயஸ் தோட்டம் வந்து, இங்கு பூதாகரமாக உருவெடுத்து, அதற்குப் பிறகு ஒரு பெண்மணி பெங்களூரு சிறையை அலங்கரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு அது சென்று சேர்ந்தது.


இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.


Similar News