சரியாக 12.44-12.45 க்கு இடையில் ராம ஜென்ம பூமி பூஜை நிகழ்வு நடைபெறும் - மேலும் பல தகவல்கள்.!

சரியாக 12.44-12.45 க்கு இடையில் ராம ஜென்ம பூமி பூஜை நிகழ்வு நடைபெறும் - மேலும் பல தகவல்கள்.!

Update: 2020-08-05 02:45 GMT

உலக இந்துக்கள் ஆர்வத்துடனும்‌ எதிர்பார்ப்புடனும் எதிர்நோக்கி காத்திருக்கும் ராமர்‌ கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்க இருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பூமி பூஜை நிகழ்வைப் பற்றிய தகவல்களும் நிகழ்ச்சி நிரலும் வெளியாகி இருக்கின்றன.

சரியாக 10.35 மணிக்கு லக்னோ வந்தடையும் பிரதமர் மோடி அதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சகேத் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் 11.30க்கு தரையிறங்க உள்ளார். அங்கிருந்து ஹனுமான்காரி ஹனுமான் கோவிலுக்கு சென்று அங்கே 7 நிமிடங்கள் செலவிட உள்ளார். நண்பகலில் ராம ஜன்ம பூமியை அடையும் அவர் அங்கே உள்ள தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராமர் கோவிலில் வழிபடுவார்‌ என்று கூறப்படுகிறது.

இதன் படி சரியாக 12.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி விநாயகரை வழிபட்டு பூஜையைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின் வெள்ளியாலான பிரதான ராமர் சிலையை வழிபடுவதோடு ராம ஜன்ம பூமி, அதாவது கோவில் கட்டப்பட இருக்கும் இடத்தையும் வழிபடுவார். பின்னர் பகவான் விஷ்ணுவின் கூர்ம அவதாரத்தைக் குறிக்கும் ஆமையின் சிலை உட்பட மற்ற எட்டு சிலைகளையும் வழிபட உள்ளார்.

மேரு மலையைத் தாங்கிய நிகழ்வை நினைவுகூர்ந்து இந்த கூர்ம சிலை முதல் அடிக்கல்லாக வைக்கப்பட உள்ளது. நேராக இந்த கூர்ம சிலையின் மேல் தான் ராமர்‌ சிலை வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மிகச் சரியாக 12.44 க்கும் 12.45க்கும் இடைப்பட்ட நேரத்தில் ஐந்து உலோகங்களால் ஆன, நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட பஞ்சலோக தாமரை மலர் இந்த கூர்ம சிலையின் மேல் வைக்கப்படும். இது தான் பிரதிஷ்தபயாமி எனப்படும் பூமி பூஜையின் முக்கியமான நிகழ்வு.

இதன்‌ பின்னர் அங்கே கூடி இருக்கும் பக்தர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். எந்த அசம்பாவிதமும் இன்றி இந்த நிகழ்வை நடத்தி முடிக்க உபி காவல்துறையினர் பெரு முயற்சி எடுத்து‌ வருகின்றனர். அயோத்திக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு தீவிர சோதனைக்குப் பின்னரே மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Similar News