கேரளா தங்கக் கடத்தல் வழக்கு : முதல்வர் பினராயி விஜயனின் ராஜினாமா கோரிப் போராடும் பா.ஜ.க.!

"ஒரு மிகப்பெரிய ஊழல் முதலமைச்சர்" என்று விஜயன் வரலாற்றில் இடம் பெறுவார் என்று கூறினார்.

Update: 2020-08-01 13:51 GMT

கேரளாவில் சமீபத்தில் நடந்த தங்க கடத்தல் சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. ஆனால் இடதுசாரி மீடியாக்கள் இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு செல்ல விடாமல், மீடியா வெளிச்சத்தில் இருந்து சுருக்கி விட்டனர். இதை தவிர்ப்பதற்காகவும் தங்க கடத்தல் வழக்கை மறுபடியும் மீடியா வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கேரள பா.ஜ.க. இன்று முதல் போராட்டங்களை ஆரம்பித்து வைத்தது.

பா.ஜ.க. தேசிய செயலாளர் புபேந்தர் யாதவ் இந்தப் போராட்டங்களை டெல்லியில் ஆன்லைன் மூலமாக துவக்கி வைத்தார். கேரளாவின் முதல்வர் அலுவலகம் இந்த தங்க கடத்தலுக்கு வசதி செய்து கொடுத்ததாக குற்றம் சுமத்தினார். இந்தப் போராட்டங்கள் ஆகஸ்ட் 18ம் தேதி வரை தொடரும் என்றும் அனைத்து பா.ஜ.க உயர்மட்டத் தலைவர்களும் ஒரு நாள் உண்ணாவிரதம் மாநிலத்தின் பல இடங்களில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள சட்டசபையின் உறுப்பினரான பா.ஜ.க MLA ராஜகோபால் திருவனந்தபுரத்தில் இன்று பா.ஜ.க கட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவர் மேலும் "ஒரு மிகப்பெரிய ஊழல் முதலமைச்சர்" என்று விஜயன் வரலாற்றில் இடம் பெறுவார் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "விஜயன் உங்களது நேரம் இப்போது முடிந்துவிட்டது. உங்கள் அலுவலகம் இந்தத் தங்கக் கடத்தல் வழக்கில் நேரடியான கட்டுப்பாட்டை கொண்டிருந்ததால், இப்பொழுது உண்மையை சொல்லும் நேரம் வந்துவிட்டது. யாரெல்லாம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதை பாருங்கள். ஸ்வப்னா சுரேஷ். அவருக்கு தகுதியே இல்லாத பொழுதும் ஐடி துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஐடி துறை அமைச்சர் திரு.விஜயன். நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்" என்று ராஜகோபாலன் தெரிவித்தார்.

பா.ஜ.க மாநில தலைவர் சுரேந்திரன், கோழிக்கோட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.அவர் இந்த தங்க கடத்தல் வழக்குக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பது மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் என்று தெரிவித்தார்.

இந்த தங்கக் கடத்தல் வழக்கு மீடியா வெளிச்சத்திற்கு வர UAE தூதரகத்தில் பணிபுரிந்த ஒரு முன்னாள் ஊழியர் சரித்தின் கைது மூலமாக வந்தது. அவர் ஜூலை 5-ஆம் தேதி 30 கிலோ தங்கத்தை தூதரக வழி மூலமாக, திருவனந்தபுரத்துக்கு துபாயிலிருந்து எடுத்து வந்தது தெரியவந்தது.

Similar News