அந்தமானில் கடலரிப்புக்கு தீர்வு காண ரூ.50 கோடியில் அமைக்கப்படும் கடல் சுவர் எழுப்பும் திட்டம்..!

அந்தமானில் கடலரிப்புக்கு தீர்வு காண ரூ.50 கோடியில் அமைக்கப்படும் கடல் சுவர் எழுப்பும் திட்டம்..!

Update: 2019-01-02 08:59 GMT

பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக  அந்தமானுக்கு சென்றிருந்தார். தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள கவர்னர் மாளிகையில் டிசம்பர் 30 அவர் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளை சந்தித்து ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். பின்னர் தென்முனை கடற்கரையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.  நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அந்தமான் பயணத்தின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி அங்குள்ள சிறைக்கு சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, நேதாஜிக்கு மரியாதையும் செலுத்தினார். பின்னர் நேதாஜி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு தபால் தலையும், நாணயமும் வெளியிட்டார்.


முன்னதாக கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக கார் நிகோபாரில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், 7 மெகா வாட் சூரியசக்தி (சோலார்) மின் நிலையம் ஒன்றையும் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பி.ஜே.ஆர். விளையாட்டரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுனாமி ஏற்படுத்திய விளைவுகளில் இருந்து விரைவாக மீண்டு வந்து கொண்டிருக்கும் அந்தமான் மக்களை பாராட்டுகிறேன். இங்குள்ள மக்களின் பாதுகாப்பே அரசின் மிக முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றாகும். இங்கு அதிகரித்து வரும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை பாராட்டுக்குரியது. இது நாட்டின் பிற பகுதிகளுக்கும் எடுத்துக்காட்டாக அமையும்.
நீண்ட காலமாக இங்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் கடலரிப்புக்கு தீர்வு காண வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் கோரிக்கையாக இருந்தது. இதை தடுப்பதற்காக இங்கு கடல் சுவர் எழுப்பும் திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. ரூ.50 கோடியில் அமைக்கப்படும் இந்த சுவருக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும்.இங்குள்ள விவசாயிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டுக்கு மலிவான மற்றும் பசுமையான எரிசக்தியை வழங்குவதில் உறுதி பூண்டுள்ளோம். கார் நிகோபாரின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இங்கு சூரியசக்தி மின் திட்டங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ள பகுதிகளை கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.



இங்கு 300 கிலோ வாட் சோலார் மின் உற்பத்தி அலகு ஒன்று அமைக்கப்படும்.கார் நிகோபார் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு கல்வி, முதியோருக்கு மருத்துவம் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் போன்றவற்றை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் அந்தமான் மக்களுக்கு சிறந்த வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு உழைத்து வருகிறது' என்று கூறினார். இதைப்போல நேதாஜி தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அந்தமானில் உள்ள 3 தீவுகளுக்கு பெயர் மாற்றம் செய்தார்.அதன்படி அங்குள்ள ரோஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பெயரை சூட்டிய அவர், நீல் மற்றும் ஹேவ்லாக் தீவுகளுக்கு முறையே ஷகீத் மற்றும் சுவராஜ் என பெயர் மாற்றினார்.



Similar News