மகாராஷ்ட்ராவில் 3 கட்சி கூட்டணி அமைவதில் பின்னடைவு? மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயிடம் அமித்ஷா அளித்த உறுதிமொழியால் பரபரப்பு !

மகாராஷ்ட்ராவில் 3 கட்சி கூட்டணி அமைவதில் பின்னடைவு? மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயிடம் அமித்ஷா அளித்த உறுதிமொழியால் பரபரப்பு !

Update: 2019-11-18 07:24 GMT

மஹாராஷ்ட்ராவில் சென்ற மாதம் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் பாஜக –
சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளை
கைப்பற்றியது.


இந்த நிலையில் ‘புத்திர பாசத்தில்’ மதி இழந்த குடும்ப அரசியல் கட்சியான
சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகனை முதல்வராக்கும் மறைமுக திட்டத்துடன்
முதல்வர் பதவியை தங்களுக்கு வழங்கினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்று
நிபந்தனை விதித்தது. ஆனால் பாஜக இதனை ஏற்கவில்லை. தேர்தலுக்கு முன்பு இத்தகைய
உறுதி எதையும் பாஜக வழங்கவில்லை என்றும் பட்நாவிஸ்தான் முதல்வர் எனக் கூறி
பிரச்சாரம் செய்து வெற்றி அடைந்ததாகவும் பாஜக தலைவர் அமித்ஷா திட்டவட்டமாக கூறினார்.


இதை அடுத்து சிவசேனா பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டு முதல்வர் பதவி
தங்களுக்கே என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து
கூட்டணி ஆட்சி அமைக்க சென்ற வாரம் பேச்சு வார்த்தை நடத்தியது. அமைச்சரவையில் மேற்கண்ட
இரு கட்சிகளுக்கும் அதிக இடங்களை வழங்கும் திட்டத்தை தயாரித்து அவர்களின் ஒப்புதலை
பெற்றது.


ஆனால் இறுதி முதல்வர் தொடர்பான முடிவை சோனியாகாந்திதான் எடுப்பார்
என்றும் இது தொடர்பாக டெல்லி சென்று அவரை நேரில் சந்திக்க சரத்பவார் மற்றும் சிவசேனா
தலைவர்கள் சந்திப்பார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இரண்டு முறை அவர்கள் டெல்லி
செல்ல திட்டமிட்டும் சோனியாவிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்காததால் நேற்றைய
அவர்களின் பயண திட்டமும் தோல்வியை தழுவியது.


ஏராளமான ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் தலைவர் குடும்பம்,
மற்றும் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மீது நீதிமன்றங்கள் எந்த கரிசனத்தையும்
இதுவரை காட்டவில்லை. சென்ற வெள்ளிக் கிழமை  நடைபெற்ற நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சொத்துக்கள்
தொடர்பான விசாரணையில் கூட ராகுல் காந்தி முன்னுக்குப் பின் உளருவதாகவும், உண்மைகளை
மூடி மறைக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது சோனியாவுக்கும், ராகுலுக்கும்
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


அதே போல ப.சிதம்பரம் தொடர்பான பொருளாதார வழக்கிலும் ஜாமீனுக்கு வழியே
இல்லை என கோர்ட் திட்டவட்டமாக கூறியதால் காங்கிரசுக்கு பலத்த அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மகாராஷ்ட்ராவில் சரத் பவார் தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான
கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்புகள் கையில்
எடுத்துள்ளன.


இந்த நிலையில் மத்திய அரசின் கோபம் மேலும் அதிகரித்தால் விளைவுகள்
கடுமையாக இருக்கும் என காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர்கள்
அஞ்சுவதால்தான் மகாரஷ்ட்ராவில் 3 கட்சி கூட்டணி அரசு அமைவதில் சுணக்கம்
ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மேலும் மகாராஷ்ட்ராவில் பாஜக தனிப்பெரும் வெற்றி
பெற்ற போதிலும் அங்கு ஆட்சி அமைக்காமல் போனால் அது தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட
பின்னடைவாகவும் அமித்ஷா எண்ணுவதால் அவர் தனது சர்வ பலத்தையும் பயன்படுத்தி ஆட்சி
அமைத்தே தீருவார் எனவும் கூறப்படுகிறது.      


இந்த சூழலில் இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்
ராம்தாஸ் அத்வாலேயிடம் மகாராஷ்டிராவில் சிவசேனா-பாஜக கூட்டணி அமையுமா என்று
நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு ராம்தாஸ் அத்வாலே கூறுகையில்,
" பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் நான் சமீபத்தில் பேசினேன்.
சிவசேனா-பாஜக இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையில் நீங்கள் தலையிட்டால் தீர்வு
வந்துவிடுமே என்று கூறினேன். அதற்கு அமித் ஷா கவலைப்படாதீர்கள். எல்லாம் நன்றாக
நடக்கும். மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக மீண்டும் ஒன்றாக இணைந்து ஆட்சி
அமைக்கும், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என உறுதியளித்தார்" எனக் கூறினார்.


அமித்ஷாவின் இந்த உறுதியான பேச்சு நிச்சயம் சிவசேனாவை வெளியில்
செல்லாமல் கட்டிப் போட்டுவிடும் என்றும் மூவர் கூட்டணி உருவாவது இயலாத ஓன்று என்றும்,
மீண்டும் பாஜக – சிவா சேனா ஆட்சி ஏற்படவே அங்கு வாய்ப்புகள் அதிகம் என்றும்
அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


Similar News