மின்சாரப் பேருந்துகளின் பயன்பாடு அதிகரிப்பு: முக்கிய மாற்றத்தை கொண்டு வரும் மோடி அரசு!

Update: 2025-05-23 04:42 GMT

பிரதமரின் மின்சார வாகனப் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்துவது குறித்த கூட்டம் மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சர் குமாரசாமி, தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் மின்சார வாகனங்களை இயக்குவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இது நாடு முழுவதும் தூய்மையான மற்றும் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதை உள்ளடக்கிய அம்சங்களுடன், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஏற்பட்டுள்ள ஒரு வலுவான முன்னேற்றத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது.


இக்கூட்டத்தில் நடைபெற்ற விரிவான ஆலோசனைகளைத் தொடர்ந்து, மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், பிரதமரின் மின்சார வாகனப் போக்குவரத்துத் திட்டத்தின் தற்போதைய நிலையில், பெங்களூரு நகரத்திற்கு சுமார் 4,500 மின்சார பேருந்துகள், ஹைதராபாத் நகரத்திற்கு 2,000, தில்லி நகரத்திற்கு 2,800, அகமதாபாத் நகருக்கு 1,000 மற்றும் சூரத்திற்கு 600 என்ற எண்ணிக்கையில் மின்சார பேருந்துகள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.


“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்திற்கு நன்றி” தெரிவித்துக் கொண்ட மத்திய அமைச்சர் குமாரசாமி, இந்தியா தற்போது நிலையான நகர்ப்புற போக்குவரத்து இயக்கத்தை நோக்கிய துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். “பெங்களூரூவிலிருந்து தில்லி வரை, நகர்ப்புறங்களில் பொது போக்குவரத்தை தூய்மையானதாகவும், அறிவுபூர்வமாகவும், திறமையாகவும் மாற்றுவதற்கு மின்சாரப் பேருந்துகளின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

Similar News