மத்தியப் பிரதேச மாநில அரசுடன் இணைந்து, மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், புகழ்பெற்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரும், கலாச்சார சீர்திருத்தவாதியுமான லோக்மாதா அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் விழாவை நேற்று (மே 31, 2025) போபாலில் உள்ள ஜம்புரி மைதானத்தில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான நிகழ்வில் கொண்டாடியது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தமது உரையில், லோக்மாதா அஹில்யாபாய் ஹோல்கரின் நீடித்த பக்தி, நல்லாட்சி, சமூக சீர்திருத்தத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்துவதாகக் கூறினார். லோக்மாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் விழா, 140 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு நிகழ்வாகவும், தேசத்தைக் கட்டியெழுப்பும் மகத்தான முயற்சிகளுக்கு பங்களிப்பதற்கான ஒரு தருணமாகவும் அமைந்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நமது மகளிர் சக்தியின் விலைமதிப்பற்ற பங்களிப்பின் சின்னமாக மாதா அஹில்யாபாய் உள்ளார் என்று அவர் கூறினார்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, அதன் தாக்கம், அதை செயல்படுத்த இந்த அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் ஆகியவற்றையும் அவர் எடுத்துரைத்தார். இப்போது, நமது அனைத்து முக்கிய விண்வெளிப் பயணங்களிலும் ஏராளமான பெண் விஞ்ஞானிகள் பணியாற்றி வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
ஒரு பெண் சொந்தமாகப் பணத்தை சம்பாதிக்கும்போது, வீட்டிற்குள் அவருடைய சுயமரியாதை அதிகரிக்கிறது என அவர் கூறினார். கடந்த பதினொரு ஆண்டுகளில், இந்தியப் பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த இந்த அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என பிரதமர் தெரிவித்தார். மக்களே கடவுள் என்பதே இந்த அரசின் ஆளுகை மந்திரமாக மாறியுள்ளது என அவர் கூறினார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை இந்த அரசு வளர்ச்சியின் அடித்தளமாக மாற்றியுள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
லோகமாதா அஹில்யாபாய் ஹோல்கர் நம்பிக்கை, மனஉறுதி, வலிமை ஆகியவற்றின் அடையாளமாக இருப்பதாகப் பிரதமர் கூறினார். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தேவி அஹில்யாபாயின் எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றின் நீடித்த தாக்கம் உள்ளது என அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு சேவை செய்வதிலும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும்தான் உண்மையான ஆளுகை உள்ளது என்று அஹில்யாபாய் கூறியுள்ளதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.