மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் இன்று முதல் ஜூன் 01- 05, 2025 வரை ஐந்து நாள் பயணமாக பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப்பயணத்தின் முதல் கட்டமாக இன்று முதல் பிரான்ஸ் நாட்டில் மூன்று நாள் அவர் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம் முக்கிய ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதற்கு உதவும்.
பிரான்சில் தமது பயணத்தின் போது, அந்நாட்டுப் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எரிக் லோம்பார்ட், அந்நாட்டு வர்த்தக அமைச்சர் லாரன்ட் செயிண்ட்-மார்ட்டின் உள்ளிட்ட பிரெஞ்சு அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார். இந்தச் சந்திப்பின் போது இந்திய-பிரான்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, வர்த்தக - முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.
தனது பயணத்தின் போது, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்திலும் அதற்கு இடையே உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்களின் முறைசாரா கூட்டத்திலும் பியூஷ் கோயல் பங்கேற்பார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பியூஷ் கோயல் பிரான்சிற்கு வரும் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார். இங்கிலாந்து, சிங்கப்பூர், சவுதி அரேபியா, இஸ்ரேல், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் பேச்சு நடத்தவுள்ளார். பிரான்ஸ் பயணத்திற்குப் பிறகு அமைச்சர், பியூஷ் கோயல் தமது பயணத்தின் அடுத்த கட்டமாக இத்தாலிக்குச் செல்லவுள்ளார்.