பிரதமரின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வை: நிறைவேற்றிய மோடி அரசு!
வெளிப்படையான, திறமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிர்வாகத்தை நோக்கிய முயற்சிகளில் ஒன்றாக புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேசிய இ-சட்டப்பேரவை செயலியை (நேவா) மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் புதுச்சேரியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், முதலமைச்சர் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தத் தொடக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க நேவா தளத்தை செயல்படுத்தும் நாட்டின் 19-வது சட்டப்பேரவையாக புதுச்சேரி மாறியுள்ளது.
காகிதமில்லா சட்டப்பேரவை செயல்பாடுகளுக்கான இந்த முன்முயற்சிக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் மூலம் மத்திய அரசு 100 சதவீதம் நிதி வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் எல்.முருகன், நேவா என்ற மாற்றத்திற்கான இந்த முன்முயற்சி சட்டப்பேரவை நடவடிக்கைகளின் நிகழ்நேர அணுகலை உறுதி செய்வதோடு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது என்றார். உத்தேசிக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, மற்றும் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்களுக்கு ஏற்ப ‘ஒரே நாடு ஒரே செயலி’ என்ற கோட்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா மாறியிருப்பது, நேரடி பயன் பரிமாற்றத்தின் மூலம் நலத்திட்ட உதவி வழங்குதல், தற்சார்பு இந்தியாவின் கீழ் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பாதுகாப்புத் தளவாட இறக்குமதி 50 சதவீதம் குறைந்திருப்பது உட்பட பிரதமர் திரு மோடி தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளின் முக்கிய சாதனைகளையும் டாக்டர் எல் முருகன் எடுத்துரைத்தார்.