மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான அமித்ஷா, அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட்டார். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் முழு நாடும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இந்தத் துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு நாட்டின் அனைத்து குடிமக்களும் ஒற்றுமையாக இணைந்து அனுதாபம் தெரிவிப்பதாகவும் கூறினார். மத்திய அரசு, குஜராத் அரசு மற்றும் பிரதமர் சார்பாக, உயிர் இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அமித்ஷா கூறினார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், குஜராத் அரசானது சுகாதாரத் துறை, தீயணைப்புப் படை, காவல் துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகள் உள்ளிட்ட அனைத்து பேரிடர் மேலாண்மை பிரிவுகளையும், அனைத்து நிறுவனங்களையும் கூட்டாக நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார். மத்திய அரசும் குஜராத் அரசும் கூட்டாக நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
விமானத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் உட்பட மொத்தம் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்ததாக திரு அமித் ஷா கூறினார். விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் சந்தித்தார். டிஎன்ஏ சோதனை முடிந்த பின்னரே இறந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். சம்பவ இடத்தை அடைந்த உறவினர்களுக்கான டிஎன்ஏ மாதிரி எடுக்கும் செயல்முறையும் அடுத்த 2-3 மணி நேரத்தில் நிறைவடையும். வெளிநாட்டில் இருக்கும் இறந்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்தியா வந்தவுடன் அவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படும் என்றும் அமித்ஷா கூறினார்.