இந்தியா-ஜப்பான் கடல்சார் உறவு: வலுப்படுத்த சென்னை வந்த இட்சுகுஷிமா கப்பல்!
கேப்டன் நவோகி மிசோகுச்சி தலைமையிலான ஜப்பான் கடலோர காவல்படை கப்பல் இட்சுகுஷிமா, அதன் உலகளாவிய பெருங்கடல் பயணப் பயிற்சியின் ஒரு பகுதியாக இன்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது.
இது இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்திய கடலோர காவல்படை மற்றும் ஜப்பான் கடலோர காவல்படை இடையேயான உத்திப்பூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது. ஒரு வார காலம் நடைபெறும் துறைமுக நிகழ்வில், உயர்மட்ட அளவிலான இருதரப்பு சந்திப்புகள், கூட்டு தொழில்முறை மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள், இரு படைகளும் பங்கேற்கும் கடற்பயிற்சி ஆகியவை அடங்கும்.
கடற்படை குழுக்களின் மரியாதை நிமித்தமான சந்திப்புகள், பரஸ்பரம் கப்பல்களை பார்வையிடல், கூட்டுப் பயிற்சி அமர்வுகள், யோகா மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் இருநாட்டு கடற்படையினரும் ஈடுபடுவார்கள். 2025 ஜூலை 12 அன்று 'ஜா மாதா' (உங்களை பிறகு சந்திக்கிறேன்) என்ற கூட்டு கடல் பயிற்சி நடைபெறும்.