அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஊராட்சி மன்ற தலைவர்: உண்மை என்ன?
கோவை மாவட்டம் காரமடை சிக்காரம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன். இவர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் இருந்து சென்னைக்கு அரசு பள்ளி மாணவ- மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்று வருகிறார். கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஒரு செயலை இவர் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த ஆண்டு கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றார்.
மேலும், தோலம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பரளி அரசு உயர்நிலைபள்ளியில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களையும் அழைத்து சென்றார். கடந்த 5 ஆண்டுகளில் கல்வி சுற்றுலாவில் 16 குழுக்களாக 850 மாணவ, மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்று ஞானசேகரன் கனவை நினைவாக்கி உள்ளார். தங்கள் நீண்ட நாள் கனவு இந்த பயணத்தின் மூலம் நிறைவேறி விட்டதாக விமானத்தில் பறந்த மாணவ மாணவியர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இது குறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறும் போது, "ஏழை மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் கனவை என்னால் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறேன்" என்று கூறினார்.