விரைவான வளர்ச்சியை எட்டி வரும் இந்தியா: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொடுத்த ரிப்போர்ட்!
நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமாக முன்னேறி வருவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐஐடி மெட்ராசின் 62-வது பட்டமளிப்பு விழாவில் இன்று தலைமை விருந்தினராக பங்கேற்று பேசிய அவர், தற்போதைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறினார். இந்தத் தலைமுறையினர் தங்கள் திறமைகளை நாட்டின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
விரைவான வளர்ச்சியை எட்டி வரும் இந்தச் சூழலில், கல்வி நிறுவனங்களும் தங்களது கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். சென்னை ஐஐடி-யைப் பொருத்தவரை இதன் முன்னாள் மாணவர் சங்கம், உலகளாவிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாணவர்களின் திறன்கள், பொருள் ஈட்டுவதற்கு மட்டுமல்லாமல், சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்தியா வளமான எதிர்காலத்தைக் கொண்டுள்ளது என்றும் அந்த எதிர்காலம் மாணவர்களை நம்பியே உள்ளது என்றும் அஜித் தோவல் கூறினார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் பேசிய, ஐஐடி மெட்ராசின் இயக்குநர் பேராசிரியர் திரு வி. காமகோடி, சென்னை ஐஐடி, கியூஎஸ் உலகத்தரவரிசையில் 47 இடங்கள் முன்னேறி 180-வது இடத்தை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டார். வலுவான தொழில்துறை ஆதரவுடன், இந்த நிறுவனம், தேசிய மற்றும் சர்வதேச நிதியுதவியுடன் பல்வேறு தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் 3,227 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவிற்கு பின்னர், ஐஐடி மெட்ராஸ், வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய அறிவுசார் மையத்தை அஜித் தோவல் திறந்து வைத்தார்.