இந்தியாவின் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் இளைஞர் சக்தி: மத்திய அமைச்சர் பேச்சு!
நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழாவில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வழியாக வழங்கினார். சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் (ரோஜ்கர் மேளா) மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்துகொண்டு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், இந்தியாவின் எதிர்காலத்தை இன்றுள்ள நமது வலிமையான இளைஞர் சத்தி நிர்மாணிக்கும் என்று கூறினார். இன்று மத்திய அரசுப் பணியில் சேரும் இளைஞர்கள் தங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று மட்டும் எண்ணாமல், நமது நாட்டை 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றும் கடமையில் பங்காற்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இன்று நம் நாடு அனைத்து துறைகளிலும் சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகிறது என்றும், பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் மூலம் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை, ரயில், விமானப் போக்குவரத்து கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் இவை மேலும் உலகத்தரத்தில் வளர்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்தார்.