நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்தப்படும் 12 புதிய நடைமுறைகள் : சாட்டையை சுழற்றும் தேர்தல் ஆணையம்.!

நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்தப்படும் 12 புதிய நடைமுறைகள் : சாட்டையை சுழற்றும் தேர்தல் ஆணையம்.!

Update: 2019-03-14 02:08 GMT

இதுவரை நடந்து முடிந்த 16 மக்களவை தேர்தல்களை விட,  வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19-ஆம் தேதி வரை பல கட்டங்களாக நடைபெற உள்ள  17 வது மக்களவை தேர்தலை வெளிப்படையாக நடத்த தேர்தல் ஆணையம் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 


1)      வாக்களிக்கும் எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னத்துடன், புகைப்படத்தையும் முதல் முறையாக இடம் பெற நடவடிக்கை


2)      அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்காளருக்கும், ஒப்புகை சீட்டு வழங்க முதல் முறையாக நடவடிக்கை


3)      வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்த முதல் முறையாக உத்தரவிடப்பட்டுள்ளதால், இதன் மூலம் வாகனங்கள் எங்கு செல்கின்றன என்பதை கண்காணிக்க முடியும்


4)      குற்றவழக்குகளில் தொடர்புடைய வேட்பாளர்கள், அவரவர் போட்டியிடும் தொகுதியில் இருந்து வெளியாகும் மூன்று நாளிதழ்கள், மூன்று தொலைக்காட்சிகளில் தங்களது குற்ற வழக்குகள் குறித்த முழுத் தகவலையும் வெளியிட வேண்டும்


5)      வேட்பாளர்கள் கடந்த 5 ஆண்டு கால வருமானம், வரித்தாக்கல் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் குறித்தும் அறிவிக்க வேண்டும் என்றும் முதல் முறையாக தேர்தல் ஆணையம் உத்தரவு


6)      நாடு முழுவதும் உள்ள 5000 வாக்குச் சாவடிகள், அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் வெப் கேமிரா பொருத்தவும், அதன் மூலம் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை மக்கள் நேரலையில் காணவும் முதல் முறையாக ஏற்பாடு


7)      தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக தேர்தல் ஆணையத்திடமே புகார் கூற, புதிய செல்போன் செயலியை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் புகைப்படங்கள், வீடியோக்களை மக்கள் பதிவேற்றம் செய்யலாம். மக்கள் புகார் தெரித்த 100 நிமிடங்களுக்குள் அதற்கான பதிலை அளிக்கவும் ஆணையம் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது.


8)      இது தவிர தேர்தல் முறைகேடுகள் குறித்து தகவல் கொடுக்கவும், புகார் தெரிவிக்கவும், ஆணையத்தின் நடவடிக்கையை மேம்படுத்த ஆலோசனை கூறவும் முதல் முறையாக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு


9)      வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போதே, சமூக வலைத்தள கணக்குகள் விபரத்தை தெரிவிக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேட்பாளரின் சமூக வலைதள செயல்பாடுகளை ஆணையம் நேரடியாக கண்காணிக்க முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


10)   சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் தேர்தல் விளம்பரங்களும் வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்பதும் நடப்பு தேர்தலில் முதல் முறை அறிவிப்பாகும். தேர்தல் தொடர்பான செய்தி, விளம்பரம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்வோர், பணம் கொடுத்து வெளியிடுவோரின் பெயர்களையும் வெளியிட முகநூல் நிறுவனம் முன் வந்துள்ளது. இதுவும் இந்த தேர்தலில் முதல் முறையாக அமலுக்கு வந்துள்ள நடவடிக்கையாகும்.


11)   முதல் முறையாக 39,000 திருநங்கைகளுக்கு வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளதும் இதுவே முதல் முறை.


12)   ஒவ்வொரு தொகுதியிலும் மகளிர் மட்டுமே வாக்களிக்கும் வகையிலான ஒரு வாக்குச்சாவடியாவது அமைக்க வேண்டும் என்ற உத்தரவும் முதல் முறையாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Similar News