PM கேர்ஸ் நிதியிலிருந்து 3 மாதங்களில் 500 ஆக்சிஜன் ஆலைகள்-மத்திய அரசு தகவல்!
பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து புதிதாக 500 ஆக்சிஜன் ஆலைகள் அடுத்த மூன்று மாதத்திற்குள் நிறுவப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் "ராணுவ ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான DRDO-வின் ராணுவ உயிரி பொறியியல் மற்றும் மின்னணு மருத்துவ ஆய்வகம் (டிஇபிஇஎல்), தேஜஸ் என்ற இலகு ரக விமானத்தில் பயன்படுத்தப்படுத்துவதற்காக உருவாக்கிய மருத்துவ பிராணவாயு தொழில்நுட்பத்தை கொவிட்-19 நோயாளிகளுக்கு பயன்படுத்த உள்ளது.
இந்த எரிவாயு தொழில்நுட்பம் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் கொள்ளவைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நிமிடத்திற்கு 5 லிட்டர் என்ற வீதத்தில் நாளொன்றுக்கு 195 சிலிண்டர்களின் மின்னூட்டத்துடன் 190 நோயாளிகளுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெங்களூருவில் உள்ள டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம் என்ற நிறுவனமும், கோயம்பத்தூரை சேர்ந்த டிரைடன்ட் நியூமாடிக்ஸ் என்ற தனியார் நிறுவனமும் 380 ஆலைகளை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நிறுவும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இதேபோல் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றத்திற்கு (CSIR) சொந்தமான டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய கழகத்துடன் இணைந்து நிமிடத்திற்கு 500 லிட்டர் திறன் கொண்ட 120 ஆலைகளை தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் என்று கூறியுள்ளது.
PM கேர்ஸ் நிதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் 125 ஆலைகள் வீதம் மொத்தம் 500 ஆலைகள் மூன்று மாதத்திற்குள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம் நிறுவனம் 332 ஆக்சிஜன் ஆலைகளையும், கோயம்பத்தூரின் டிரைடன்ட் நியூமாடிக்ஸ் தனியார் நிறுவனம் 48 ஆலைகளையும் அமைக்க DRDO முடிவு செய்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் இருந்துவரும் நிலையில் மருத்துவ ஆக்சிஜன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி DRDO இதுபோன்ற ஆக்சிஜன் ஆலைகளை நிருவ உள்ளதை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பாராட்டியுள்ளார்.