ஸ்ரீராமாயணம் தொடர்புடைய ஸ்தலங்களுக்கு 16 நாட்கள் சுற்றுலா-'ராமாயணா எக்ஸ்பிரஸ்'

ஸ்ரீராமாயணம் தொடர்புடைய ஸ்தலங்களுக்கு 16 நாட்கள் சுற்றுலா-'ராமாயணா எக்ஸ்பிரஸ்'

Update: 2019-08-24 05:37 GMT

ராமாயண காப்பியத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் ராமபிரான் சம்பந்தப்பட்ட முக்கிய இடங்களுக்கு அழைத்து செல்லும் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த ஆண்டும் ஏற்பாடு செய்துள்ளது.


இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் ஆண்டுதோறும் பல சுற்றுலா திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ராமாயண காப்பியத்தில் ராம பிரான் வாழ்க்கை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்து செல்லும் சுற்றுலா திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தியாவில் உள்ள இடங்கள் மட்டும் ஒரு பிரிவாகவும் இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை உள்ளடக்கியவை மற்றொரு பிரிவாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்ததை அடுத்து இந்த ஆண்டும் அந்த சுற்றுலா திட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவுக்கான முதல் ரயிலுக்கு 'ஸ்ரீ ராமாயண யாத்ரா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நவம்பர் 3ல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு டில்லி வழியாக பயணத்தை தொடர்கிறது. இரண்டாவது ரயிலுக்கு 'ராமாயணா எக்ஸ்பிரஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நவம்பர் 18ல் மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் இருந்து புறப்பட்டு உ.பி.யின் வாரணாசி வழியாக பயணத்தை தொடர்கிறது.


 இந்தியா - இலங்கை சேர்த்து இதன் பயண நாட்கள் 16 பகல் 17 இரவுகளாக திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியாவில் இடம்பெற்றுள்ள ராமாயண திருத்தலங்களுக்கு செல்ல தலா 16 ஆயிரம் ரூபாயும் இலங்கைக்கும் சேர்த்து செல்ல தலா 37 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மற்றொரு ரயில் மதுரையில் இருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'அதன் தேதி விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Similar News