மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்!

மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்!

Update: 2020-08-06 09:15 GMT

மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. வங்கிகளுக்குக் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் நான்கு சதவிகிதமாகத் தொடரும். ரெப்போ விகிதம் மாறாமல் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 

"2020 - ஆம் ஆண்டின் முதல் பாதியை எடுத்துக்கொண்டால், உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமாக இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மீண்டும் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

பண வீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020 - 2021 ஆம் ஆண்டை பொறுத்த வரைக்கும்,  நாட்டின் உற்பத்தி வளர்ச்சி எதிர்மறையாகவே இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளோம். கொரோனா பாதிப்பினால், தங்கம் மீதான கடன் அதிகரித்துள்ளது. முன்பு 75 சதவிகிதமாக இருந்த தங்கம் மீதான கடன் வாங்கும் விகிதம், இன்றைய சூழலில் 90 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில் தொழில்துறை வளர்ச்சிக்குக் கடன் வழங்குவது அவசியம் என்பதால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், முதன்மைத் துறைகளுக்கும் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், தேசிய வீட்டுவசதி வங்கி மற்றும் நபார்டு வங்கிக்கு ரெப்போ விகிதத்தில் ரூ. 10,000 கோடி கூடுதல் கடன் வழங்கப்படும். மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழத்தொடங்கியுள்ளது. 

இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 2020 ஏப்ரல் - ஜூலை மாதங்களில் 56.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்து, ஜூலை 31, 2020 நிலவரப்படி 534.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது 13.4 மாத இறக்குமதிக்கு சமம் என்று தெரிவித்துள்ளார்.


Similar News