கர்நாடக மாநிலத்தில் தொடரும் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல்! காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் அபாயம் !!

கர்நாடக மாநிலத்தில் தொடரும் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல்! காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் அபாயம் !!

Update: 2019-07-03 08:45 GMT


கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 105 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 113 எண்ணிக்கையை பாஜக எட்டவில்லை.


பாஜக ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காக 79 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ், 38 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்துள்ள தேவகவுடா மகன் குமாரசாமியை (மதசார்பற்ற ஜனதா தளம்) முதல்வராக்கியது.


இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு உமேஷ்ஜாதவ் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பு வழங்கியது. அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இதேபோல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகிய 2 பேரும் திடீரென்று ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து கூட்டணி அரசுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 117-ஆக குறைந்து விட்டது.


ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர் ஏற்கனவே சபாநாயகர் ரமேஷ் குமார் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆனால் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறினார்.


இதைத்தொடர்ந்து கர்நாடக கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஆனந்த்சிங் வழங்கினார். இன்று ரமேஷ் ஜார்கிஹோளி எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நேரில் வழங்க உள்ளார்


இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீமாநாயக் எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.  இதுதொடர்பாக இன்று அவர் கர்நாடக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு உள்ளார். அவர் கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இவரை தவிர ராய்ச்சூர், பெல்லாரி மாவட்டங்களை சேர்ந்த மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார்கள் என்று கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருவது குமாரசாமி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.


Similar News