குலசேகரப்பட்டினத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்!
குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனியார் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.எல்.வி.எப் - 10 ராக்கெட் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டது. கிரையோஜெனிக் நிலையில் கசிவு இருந்ததால்தான் தோல்வி ஏற்பட்டதாக அந்த குழு அறிக்கை அளித்தது. அந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதன் மூலம் ஜி.எஸ்.எல்.வி எப்- 12 ராக்கெட் தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. என்.வி.எஸ்-2-ஆம் தலைமுறையை மையமாகக் கொண்டு ஏவப்பட்டு உள்ளது .இது புவி வட்ட பாதையை சேர்ந்தது. இதில் இருந்து திறம்பட துல்லியமாக தகவல்களை பெற முடியும்.
இந்த செயற்கைக்கோள் ரகத்தில் மொத்தம் ஐந்து செயற்கைக்கோள் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளன. மீதமுள்ள நான்கு செயற்கை கோள்கள் ஆறு மாதத்திற்கு ஒன்று வீதம் அனுப்பப்பட உள்ளன. இந்த செயற்கைக்கோள் மூலம் நம் நாட்டுக்கு தேவையான தகவல்களை பெறுவதுடன் வரும் காலங்களில் அதிக அளவில் வாய்ப்புகளை பெற முடியும். அடுத்து ஜி எஸ்.எல்.வி ரகத்தில் 'இன்சாட் 3-டி.எஸ்' என்ற செயற்கைக்கோள் காலநிலை மாற்றம் குறித்து ஆராய விண்ணில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தியா நாசாவுடன் இணைந்து நிசார் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது . தொடர்ந்து ஜி. எஸ். எல். வி மார்க்- 3 , எஸ்.எஸ்.எல்.வி ககன்யா உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. மீண்டும் பயன்படுத்தப்படும் ராக்கெட் செயல் வடிவத்துக்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்குமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணிகளில் இஸ்ரோ இறங்கி உள்ளது .