SAIL நிறுவனம் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் சப்ளை - மத்திய அரசு தகவல்!
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக எஃகு நிறுவனங்கள் (Steel Industries) ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய எஃகு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எஃகு நிறுவனங்களின் தலைவர்களுடன் கடந்த வாரம் ஆலோசனை கூட்டங்கள் நடத்தினார். அப்போது, மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் மிகப் பெரிய எஃகு உற்பத்தி நிறுவனமான இந்திய எஃகு ஆணையம்(SAIL) நாட்டில் ஆக்ஸிஜன் விநியோக திறனை அதிகரித்துள்ளது. சட்டீஸ்கரின் பிலாய், ஒடிசாவின் ரூர்கேலா, ஜார்கண்டின் பொகாரா, மேற்குவங்கத்தின் துர்காபூர் மற்றும் பர்ன்பூரில் உள்ள தனது ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளில் இருந்து ஏப்ரல் 2வது வாரத்தில் 500 மெட்ரிக் டன்னாக இருந்த தினசரி திரவ ஆக்ஸிஜன் விநியோக அளவை, தற்போது 1100 மெட்ரிக் டன்டாக SAIL உயர்த்தியுள்ளது.
இந்த நிறுவனம் இதுவரை 50,000 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை விநியோகித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் SAIL நிறுவனம் நாடு முழுவதும் 15 மாநிலங்களுக்கு 17,500 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமாக திரவ ஆக்ஸிஜனை விநியோகித்துள்ளது. இதன் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருவது குறிப்பிடத்தக்கது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.