மோடி, அமித்ஷாவுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு! டெல்லி – மும்பையில் அரசியல் பரபரப்பு உச்சகட்டம்!

மோடி, அமித்ஷாவுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு! டெல்லி – மும்பையில் அரசியல் பரபரப்பு உச்சகட்டம்!

Update: 2019-11-20 10:45 GMT

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு அமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் டெல்லியில் இன்று சந்தித்து இருப்பது, மராட்டிய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதில் சிவசேனா தீவிரமாக உள்ளது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை அடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், சோனியாவை கடந்த திங்கட்கிழமை சந்தித்துப் பேசிய சரத்பவார், அவருடன், மராட்டிய அரசியல் பற்றி பேசவில்லை என்றார்.
இதனால், சிவசேனா தரப்பு, கடும் குழப்பத்திலும், அதிருப்தியிலும் ஆழ்ந்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத், சரத்பவாரை சந்தித்து பேசிய பின் நிருபர்களிடம் இன்று காலை பேட்டி அளிக்கையில் “சரத்பவாரின் டெல்லி பேட்டியை புரிந்து கொள்ள 100 பிறவி எடுக்க வேண்டும் என்றார். பிறகு ஒப்புக்காக சிவசேனா தலைமையில் ஆட்சி உறுதி” என்று கூறினார்.
இந்த குழப்பத்துக்கு இடையே , தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பிரதமர் நரேந்திர மோடியை, நாடாளுமன்றத்தில் வைத்து இன்று பகல் 12 மணிக்கு சந்தித்துப் பேசினார். சிறிது நேரத்தில் அந்த சந்திப்பில் அமித்ஷா மற்றும் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில் அமித்ஷா மட்டும் அங்கிருந்து வெளியே வந்தார்.


மகாராஷ்டிர விவசாயிகள் பிரச்சினை குறித்துப் சரத்பவார் பிரதமருடன் விவாதித்ததாக கூறப்பட்டாலும், தேசியவாத காங்கிரசுடன் பாஜக மகாராஷ்டிர அரசியல் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியது. பாஜகவினர்  இதை திட்டவட்டமாக மறுத்தாலும் வதந்திகளால் தலைநகர் டெல்லியிலும், மும்பையிலும் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.  


இந்நிலையில், மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசில் பங்கெடுப்பது, குறித்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஒன்றுகூடி, முடிவெடுக்க இருப்பதாக காலையில் தகவல் வெளியானது. சாதகமான முடிவெடுக்கப்பட்டால், உத்தவ் தாக்கரே டெல்லி வந்து சோனியாவை சந்திப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்காததால் சிவசேனா தலைவர்களது முகம் இறுகிய நிலையில் காணப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.


Source:- INDIA TODAY


Similar News