ஸ்ரீ விஜேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்த ஸ்ரீ விஸ்வப்பிரசன்ன தீர்த்த ஸ்வாமிகள்.! #Ayodhya #RamMandir

ஸ்ரீ விஜேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்த ஸ்ரீ விஸ்வப்பிரசன்ன தீர்த்த ஸ்வாமிகள்.! #Ayodhya #RamMandir

Update: 2020-12-10 08:42 GMT

அயோத்தியா ஸ்ரீ ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பிரச்சாரத்தை 2021 ஜனவரி 15 முதல் 45 நாட்களுக்கு நடத்த ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அறக்கட்டளையின் ஒரே தென்னிந்திய பிரதிநிதியாக பெஜாவர் மடத்து பீடாதிபதிகள் ஸ்ரீ விஸ்வப்பிரசன்ன தீர்த்த ஸ்வாமிகள் இருக்கிறார்.

நவம்பர் 1, 2020 அன்று, ஸ்ரீ விஸ்வப்பிரசன்ன தீர்த்த ஸ்வாமிகள், அயோத்தியில் உள்ள கட்டுமான இடத்தை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அறங்காவலர்களின் சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பை அடுத்து ஸ்ரீ விஸ்வப்பிரசன்ன தீர்த்த ஸ்வாமிகள் நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார்.

இந்து மதத் தலைவர்களை சந்தித்து கட்டுமான செயல்முறை, நிதி மற்றும் செலவுகள் குறித்து விவரித்து வருகிறார். கடந்த மாதம் ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி ஆயுர்வேத பீடத்தை பார்வையிட்ட ஸ்வாமிகள், ஸ்வாமி பாபா ராம்தேவை சந்தித்தார்.

ஸ்ரீ விஸ்வப்பிரசன்ன தீர்த்த ஸ்வாமிகள், டிசம்பர் 8ஆம் தேதி, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் 2024 ஆம் ஆண்டு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

ஸ்ரீ ராமர் கோவிலின் கட்டுமானம் 1,400 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறிய அவர், மேலும் கட்டுமானத்திற்காக பக்தர்களின் பங்களிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று கூறினார். முன்னதாக ஸ்வாமிகள், ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை சந்தித்து ஸ்ரீ ராமர் கோவிலின் கட்டுமான பணிகளுக்கு அவரது ஆதரவை கோரினார்.

புதன்கிழமை மாலை, ஸ்வாமிகள் காஞ்சிபுரத்திற்கு சென்று, காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீ விஜேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்தார். ஸ்ரீ ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் குறித்து விளக்கி, வரவிருக்கும் நிதி திரட்டும் பிரச்சாரம் மற்றும் பிற கட்டுமான நடவடிக்கைகளுக்கு காஞ்சி ஸ்வாமிகளின் ஆதரவைக் கோரினார். 

புதன்கிழமை மாலை, ஸ்ரீ விஸ்வப்பிரசன்ன தீர்த்த ஸ்வாமிகள் காஞ்சிபுரத்தில் உள்ள வியாசராஜ மடம் மற்றும் உத்தராதி மடம் ஆகிய இடங்களுக்கும் சென்றார்.

Similar News