போதுமான ஏற்பாடுகள் செய்வதை விட்டுவிட்டு, அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் என்று சொல்வதா? - பக்தர்கள் கொந்தளிப்பு!!

போதுமான ஏற்பாடுகள் செய்வதை விட்டுவிட்டு, அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் என்று சொல்வதா? - பக்தர்கள் கொந்தளிப்பு!!

Update: 2019-07-20 11:24 GMT


காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள அத்திவரதரை தினமும் லட்சக்கணக்கானோர் தரிசித்து செல்கின்றனர். இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், அத்திவரதரை தரிசித்துள்ளனர்.


48 நாட்கள் மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஜூலை 1 - ஆம் தேதி துவங்கிய அத்திவரதர் விழா ஆகஸ்ட் 17 - ஆம் தேதி வரை நடக்கிறது. அதன் பிறகு மீண்டும் அத்திவரதர் கோயில் திருக்குளத்திற்குள் சென்றுவிடுவார்.


இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஜூலை 18 அன்று 4 பக்தர்கள் உயிரிழந்ததனர். இந்த நிலையில், நேற்று (ஜூலை 19) 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்திவரதரை தரிசிக்க குறைந்தபட்சம் 4 முதல் 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. 


இந்த நிலையில் காஞ்சிபுரம் கலெக்டர் ஒரு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார். அதில், “முதியவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்டோர் அத்திவரதரை தரிசிக்க வருவதை தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வேண்டுகோள் அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது.


இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் பக்தர்கள் கொதித்துபோய் உள்ளனர். ஒருவர் தனது வாழ்க்கையில் பெரும்பாலும் ஒரே ஒருமுறைதான் அத்திவரதரை தரிசிக்க முடியும். அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதை விடுத்து, அத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என்று சொல்வதற்கு கலெக்டர் ஒருவர் தேவையா? என்று ஆவேசமாக கேட்கின்றனர் பக்த்தர்கள்.


கருணாநிதியின் 3 - வது மனைவி ராசாத்தி அம்மாளை வீல் சேரில் அழைத்து செல்ல முடிகின்ற மாவட்ட நிர்வாகத்திற்கு மற்ற வயதானவர்களை ஏன் அழைத்து செல்ல முடியவில்லை? என்று கேட்கின்றனர். 


திருப்பதியில் உடல் ஊனமுற்றோர், முதியவர்கள், நோயாளிகள், கர்பிணிகள் போன்ற பக்தர்களுக்கு தனி வரிசை பின்பற்றப்படுகிறது. அதுபோல அத்திவரதரை தரிசிப்பதற்கும் ஏன் தனி வரிசை ஏற்படுத்தக்கூடாது?


சுமார் 6 கி.மீ. வரை வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் இன்னுமும் போதுமான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வில்லை. கடமைக்காக செய்வது போலவே செய்துள்ளனர். ஆட்டோக்களுக்கு கண்டபடி கட்டணம் வசூலிக்கிறார்களே, இது கலெக்டருக்கு தெரியுமா? தெரியாதா? 


சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி போக்குவரத்தை மேலும் எளிமையாக ஏன் முயற்சி செய்யவில்லை? வரிசையில் வரும் பக்தர்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுகிறதா?


எல்லாவற்றிற்கும் மேலாக சாமி கும்பிடுவது ஒவ்வொரு இந்துவின் தனிப்பட்ட உரிமை. அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது இந்து அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கடமை. இதை மனதில் கொண்டு அனைத்து பக்தர்களுக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதே, பக்த்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.


Similar News