முத்தலாக் தடை மசோதா எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல, மனிதநேயத்துக்கானது: மக்களவையில் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு

முத்தலாக் தடை மசோதா எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல, மனிதநேயத்துக்கானது: மக்களவையில் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு

Update: 2018-12-27 12:13 GMT
முத்தலாக் தடை மசோதா எந்த மதத்துக்கும், சமூகத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல. மனிதநேயத்துக்கானது என்று முத்தலாக் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசினார்.
முத்தலாக் நடைமுறை, சட்டவிரோதம், அது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போதிலும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிலர் அதைத் தொடர்ந்து பின்பற்றினர். அந்த நடைமுறையைச் சட்டப்பூர்வமாக தடை செய்யும் வகையில், அவசரச் சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தில், முத்தலாக் நடைமுறையானது சட்ட விரோதம். அதைக் கடைப்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதா, மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது. அப்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில் மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக, நாடாளுமன்றத்தில் புதிய முத்தலாக் தடை மசோதாவைத் திருத்தங்களுடன் மத்திய அரசு கடந்த 17ஆம் தேதி கொண்டு வந்தது. 27-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்தது.
அவையில் முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "முத்தலாக் முறையைத் தடை செய்யவே முத்தலாக் தடை மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கிரிமினல் குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த முத்தலாக் தடை மசோதா எந்த மதத்துக்கோ, நம்பிக்கைக்கோ, சமூகத்துக்கோ எதிரானது அல்ல. மனிதநேயத்தைக் காக்கவே இந்த மசோதாவை அறிமுகப்படுத்துகிறோம்.
நம்முடைய சகோதரிகளின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். முத்தலாக் சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. வரதட்சணைக் கொடுமை, குழந்தைகள் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நடைமுறைக்கு வந்தபோது அதற்கு ஆதரவு அளித்தீர்கள். இப்போது, இந்த மசோதாவுக்கும் ஆதரவு அளியுங்கள்.
உலகில் 20 முஸ்லிம் நாடுகள் முத்தலாக்கை தடை செய்துவிட்டன. மதச்சார்பற்ற நம் நாடு ஏன் தடை செய்யவில்லை. அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த மசோதாவைப் பார்க்க வேண்டும் “ என்று பேசினார்.
அப்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்த்யோபத்யாயே, கேரள எம்.பி. பிரமேச்சந்திரன் ஆகியோர் பேசுகையில், ''இந்த மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்'' எனத் தெரிவித்தனர்.

Similar News