முன்னிலைப்படுத்தப்படும் உதயநிதி - தி.மு.க. வின் வியூகமா? விதியா? #Udhayanithi #Dmk

முன்னிலைப்படுத்தப்படும் உதயநிதி - தி.மு.க. வின் வியூகமா? விதியா? #Udhayanithi #Dmk

Update: 2020-07-03 13:53 GMT

திமுக என்பது கட்டமைப்புகளால் உருவானது. அறிவாலயத்தில் கலைஞரின் பேனா எழுதும் ஒவ்வோர் எழுத்தும் களப்பணியில் இருக்கும் கடைசி தொண்டனின் உயிர் மூச்சாக இருக்கும். இதுதான் அன்றைய திமுக. ஆனால் இன்றைய திமுக கட்டமைப்பை கனவிலும் கூட நினைக்குமா என தெரியவில்லை! தனி நபர்களின் ஆதிக்கம், குடும்ப உறுப்பினர்களின் பரமபத விளையாட்டு, ஒருவர் பெயர் வாங்கினால் அதை மற்றொருவர் முந்தி செல்ல நினைப்பது. இரண்டாம் கட்ட தலைவர்களை கொலு பொம்மை போல் வாய்பேசாமல் வைத்துருப்பது. சிறுபான்மையினரின் ரட்சகர் என காட்டிக்கொண்டு அவர்களை கருவேப்பிலை மாதிரி உபயோகபடுத்துவது, சினிமா'வில் வளரும் நட்சத்திரங்கள், வளர்ந்த நட்சத்திரங்கள் அனைவரையும் எம்.ஜி.யார் கோணத்தில் வைத்து பயம்கொண்டு பார்ப்பது என இழுபறி நிலையில் தான் திமுக உள்ளது. இந்த இழுபறி நிலையை மேலும் சிக்கலாக்கும் விதமாக உதயநிதியின் உதயம். இது திமுக'விற்கு வியூகமா? விதியா?

சட்டமன்ற தேர்தலில் திமுக மு.க ஸ்டாலின் மட்டும் இன்றி உதயநிதி ஸ்டாலினையும் முன்னிலைப்படுத்தியே களப்பணியாற்ற உள்ளதாகவும் இதற்கான வியூகமாகவே சமூக வலைதளங்களில் உதயநிதி அதிகம் புரமோட் செய்யப்படுவதாக கூறுகிறார்கள்.

திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு வந்தது முதல் உதயநிதி ஆக்டிவ் அரசியலில் செய்யும் கட்டாயத்தில் உள்ளார், ஆனால் பெரும்பாலும் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை. மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு, சமூக வலைதளங்களில் கருத்து என்று ஒரு எல்லைக்குள்ளே அவர் அரசியல் செய்து வந்தார். முதல் முறையாக சாத்தான்குளம் சம்பவத்தில் திமுக தலைமையின் நேரடி பிரதிநிதியாக அங்கு சென்று வந்தார் உதயநிதி. இதனால் தன் அத்தையாகிய கனிமொழி பெயர் வாங்கிவிட கூடாது என்ற முனைப்பு அவர் நடவடிக்கையில் தெரிந்தது.

சம்பவம் நடைபெற்ற போது ராத்திரி பகலாக அங்கு இருந்த கனிமொழி கடந்த இரண்டு நாட்களாக சாத்தான் குளம் சம்பவ விவகாரத்தில் ஒதுங்கியது போல் தெரிகிறது. போலீஸ் கைது நடவடிக்கை எடுத்த பிறகு இந்த விஷயம் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் திடீரென ரஜினியை வஞ்சப் புகழ்ச்சி செய்து நேரடியாகவே உதயநிதி ட்வீட் செய்தார். இதற்கு முன்பு எல்லாம் ரஜினி பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்வதை உதயநிதி வாடிக்கையாக வைத்திருந்தார்.

ஆனால் ரஜினியை நேரடியாக விமர்சித்து திமுக வெர்சஸ் ரஜினி என்கிற களத்தை உதயநிதி நேரடியாகவே துவக்கலாம் என்பதே திமுக'வின் கனவு அனால் குழந்தைக்கு கூட தெரியும் ரஜினி எனும் இமயத்தின் உயரமும் திமுக என்ற குன்றின் கட்டமைப்பும்.

இப்படி திடீரென மிக முக்கிய விஷயங்களில் உதயநிதி முன்னிலைப்படுத்தப்படுவதும் ஸ்டாலின் பின்னணியில் இருப்பதும் திமுகவின் புதிய வியூகம் என்கிறார்கள். கலைஞர் – ஸ்டாலின் இருந்த போது எந்த மாதிரியான அரசியல் திமுக செய்ததோ அதே பாணியில் தற்போது ஸ்டாலின் – உதயநிதி என்று செயல்பட முடிவெடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.

தேர்தல் சமயத்திலும் கூட ஸ்டாலின் கலைஞரை போல் லிமிடெட் பிரச்சார கூட்டங்களில் மட்டும் பங்கேற்க உள்ளதாகவும் கலைஞர் இருந்த போது ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது போல் உதயநிதியை களம் இறக்கவும் வியூகம் வகுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

இதற்கு திமுக வியூகம் என பெயரிட்டாலும் இதுவும் விதி'தான். ஆம், இதை விதி என்றுதான் கூற முடியும். ஸ்டாலினின் செயல்பாடுகள், மேடை பேச்சுகள், அரசியல் அரங்கில் உள்ள பெயர் அனைத்துமே கலைஞர் போல் ஆளுமையாக பார்க்க படுவதில்லை மாறாக இவை அனைத்துமே மக்களின் மத்தியில் நகைச்சுவையாக பார்க்கபடுவதுதான் திமுக'வின் தலைவலியே. ஸ்டாலினின் உளறல்கள் அனைத்துமே இதற்கு சான்று. இவரா கலைஞரின் வாரிசு என உடன்பிறப்புகளே தலையில் அடித்து கொள்ளும் அளவிற்கு உள்ளது அவரின் செயல்பாடுகள்.

இதனாலேயே உதயநிதி திமுக'வின் முகமாக உருவாக்கப்படுகிறார் ஸ்டாலினின் நகைச்சுவை பிம்பத்தை மாற்ற வேறு தலைவரையும் மாற்ற இயலாத கையறு நிலை திமுக'விற்கு ஆகையால் உதயநிதியை விட்டால் வேறு வழியும் இல்லை. 2021 தேர்தல் என்பது திமுக'விற்கு வாழ்வா? சாவா போராட்டம் கடைசி 10 ஆண்டுகளாக செலவு மட்டுமே செய்து உள்ளூர புலம்பும் மாவட்ட செயலாளர் முதல் அனைத்து பொருப்பாளர்களும் 2021 தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லாத நிலையில் பறந்துவிட தயார் என தலைமைக்கே தெரியும். பார்ப்போம் விதி வியூகமாக மாறுமா என்று!

Similar News