இரண்டுக்கெட்டான் நிலையில் திருமாவளவன் - விடுதலைச் சிறுத்தைகள் டெல்லியில் முகாம்: அதிருப்தியில் திமுக..!

இரண்டுக்கெட்டான் நிலையில் திருமாவளவன் - விடுதலைச் சிறுத்தைகள் டெல்லியில் முகாம்: அதிருப்தியில் திமுக..!

Update: 2019-03-12 16:38 GMT

திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு தனிச்சின்னம் கேட்டு டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடாததால் திமுக அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கேட்ட 2 தொகுதிகள் திமுக ஒதுக்கியது. இதில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சொந்தச் சின்னத்தில் நிற்பதா? உதயசூரியன் சின்னத்தில் நிற்பதா? என்கிற கேள்வி எழுந்தது.


திமுக தரப்பில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கும்போதே உதயசூரியன் சின்னத்தில் நின்றால் நன்றாக இருக்கும் என கேட்டதாகவும் அதை பரிசீலிப்பாதாக திருமாவளவன் கூறியதாக தகவல் வெளியானது. தங்களது சின்னமான மோதிரம் சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விண்ணப்பித்தது. ஆனால் தமிழ்நாடு இளைஞர் கட்சி எனும் புதியகட்சி 39 தொகுதிகளில் நிற்பதற்காக மோதிரம் சின்னத்தைக்கேட்க 2 தொகுதிகள் மட்டும் நிற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கேட்டதால் அதிக இடங்களில் நிற்க கேட்ட கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டது


இதனால் மோதிரம் சின்னமும் இல்லாத நிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் தள்ளப்பட்டதால் புதிதாக சின்னத்தை வாங்கி அதை மக்கள் மத்தியில் கொண்டுச்சென்று போட்டியில் வெல்லவேண்டிய நிர்பந்தம் உள்ளதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு புதிய நெருக்கடி உண்டாகியுள்ளது. தனிச்சின்னம் புதிய சின்னம் கிடைத்தாலும் அதில் நிற்பதில் விடுதலைச் சிறுத்தைகள் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவால் திமுக தரப்பில் அதிருப்தி உள்ளதாக கூறப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்டகால அரசியலா? தற்போதைய தேர்தல் வெற்றியா? என்கிற இரண்டுக்கெட்டான் நிலையில் திருமாவளவன் நிலை உள்ளது என்பதே நிதர்சனம்.


Similar News