தியான நிலையில் தனித்திருத்தல் என்பது என்ன? ஒரு ஆழமான பார்வை!

தியான நிலையில் தனித்திருத்தல் என்பது என்ன? ஒரு ஆழமான பார்வை!

Update: 2019-11-11 10:23 GMT

தனித்திருத்தல் என்பதற்கு தனிமையில் இருத்தல் என்று பொருளல்ல. இந்த உலகத்தோடு
இணைந்தும் இணையாமல் இருப்பது. நம்மை சூழ்ந்துள்ள சூழ்நிலையாலும் பாதிக்கப்படாமல்
இருக்கும் தன்மையே தனித்திருத்தல் என்பதாகும். ஆனால் சூழ்நிலைகளாலும் மனிதர்களாலும்
பாதிக்கப்படாமல் இருப்பது என்பது இயலாத காரியம். நாம் எல்லோருமே சூழ்நிலை சார்ந்த
மனிதர்கள் சார்ந்து ஆணவம், துயரம், கோபம், பயம் என்ற மனநிலைகளோடே வாழ்ந்து
வருகிறோம். நாம் தனித்திருக்க இயலாமல் எல்லாவற்றோடும் தொடர்புபடுத்திக் கொள்ளும்
மன நிலையில் இருப்பதே இதற்கு காரணம்.


தமாரா லெச்னர் என்ற பிரபல தியான ஆசிரியர் இந்த தனித்திருக்கும் வழியை அடைய ஐந்து
விதமான படி நிலைகள் கொண்ட தியானத்தை சொல்லியிருக்கிறார். முதல் நிலையாக நம்
மனதை அமைதிப்படுத்தி என்ன மாதிரியான எண்ணங்கள் எழுகின்றன என்பதைக் கவனித்தல்.
'நாம்' என்பது 'நம் எண்ணங்கள்' அல்ல. நாம் வேறு நம் எண்ணங்கள் வேறு என்ற உணர்வு
நிலைக்கு நாம் சென்று விடுவோம். இரண்டாவதாக எண்ணங்கள் எதன் மூலமாக
வலுவடைகிறது என்று பார்க்கவேண்டும் பெரும்பான்மையான எண்ணங்களுக்கு நம் தன்
முனைப்பே வலிமை சேர்க்கிறது.


இந்தத் தன்முனைப்பையும் சூழ்நிலையின் அவசியத்தையும் பிரித்துப் பார்க்கின்ற மனநிலை
வேண்டும். இந்த மனநிலை நம்மை தனித்திருக்கும் தன்மைக்கு அழைத்துச் செல்லும். அலி
இபின் என்ற அறிஞர் சொன்னதை போல், 'நீங்கள் எல்லாவற்றையும் விட்டு விலகி ஒன்றும்
அற்றவராக இருக்க வேண்டும் என்பதல்ல. ஒன்றுமற்றதை உங்களுடையதாக
மாற்றிக்கொள்ளவேண்டும்.


மூன்றாவதாக மனம், சூழ்நிலை, உடல் இந்த மூன்றையும் தனியாக பிரித்து நம் தன்மை
இதுவல்ல என்று புரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு சூழலையும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு
மனிதரையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


'நான்' என்ற தன்மையில் இருந்து ஒதுங்கி நின்று நம் மனம், உடல், சூழல் ஆகியவை நான்
அல்ல என்று ஒவ்வொரு நாளும் பிரித்துப் பார்க்க பழக வேண்டு. நான்காவதாக நம் மனம் பழகி
இருக்கும் தேவையற்ற எண்ண பதிவுகளையும் அதனால் விளையும் செயல்களையும் நீக்கி இந்த
'தனித்திருந்து பார்க்கும்' தியானத்தை பயன்படுத்த வேண்டும். தியானத்தில் ஆழமாக செல்லும்
போது எண்ணங்களின் வலிமை ஆட்படாமல் எண்ணங்களை ஒதுங்கி நின்று பார்க்கும் தன்மை
ஏற்பட வேண்டும்.


ஐந்தாவதாக ஒரு வேளை இப்படியான தியானம் பயின்றும் பழைய எண்ணங்களின் பிடியில்
சிக்கிக் கொண்டால், சோர்ந்து போகாமல் அதையே ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்த
வேண்டும். இந்த சூழல் வந்தது ஏன் ? எங்கு தவறு நிகழ்ந்தது என்று சுய பரிசோதனை செய்து
கொள்ளும் ஒரு வாய்ப்பாக அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் நிறைய
கஷ்டங்களும் சிரமங்களும் இருக்கும். அதை மன உறுதியோடு தாண்டி வந்து விட்டால் பிறகு இந்த பாதையில் பயணிப்பது எளிதாகிவிடும். இறை அருளும் முயற்சியும் இருக்குமாயின் இந்த
தனித்து இருத்தல் என்ற நிலை நிச்சயம் கைகூடும்.


Similar News