காஷ்மீரில் இடம் வாங்கி குடியேறி, சட்ட பணி செய்ய விருப்பம்! அமித்ஷாவுக்கு மதுரை வழக்கறிஞர் கடிதம்!!

காஷ்மீரில் இடம் வாங்கி குடியேறி, சட்ட பணி செய்ய விருப்பம்! அமித்ஷாவுக்கு மதுரை வழக்கறிஞர் கடிதம்!!

Update: 2019-08-09 07:51 GMT


மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துக்குமார். இவர், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சொத்து வாங்க அனுமதி கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.


அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-


நான், சட்டப்பிரிவு 370 ரத்தை மகிழ்ந்து கொண்டாடுகிறேன். இதற்குக் காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதேபோல், காஷ்மீரில் மற்ற மாநில மக்கள் குடியமர இந்த அரசாங்கம் தேவையான வரைமுறைகளை விரைவில் வகுக்கும் என நம்புகிறேன்.


சட்டப்பிரிவு 370 ரத்து மற்ற மாநிலத்தவரும் அங்கு நிலம் வாங்க வழிவகை செய்துள்ள நிலையில், நான் காஷ்மீரில் எந்த நிபந்தனையுமின்றி குடியேற விரும்புகிறேன். அதற்காக காஷ்மீரில் எனக்குச் சொந்தமாக நிலம் வாங்க விரும்புகிறேன். அதன்மூலம் தென் பகுதியிலிருந்து காஷ்மீரில் நிலம் வாங்கிய முதல் பாஜக உறுப்பினர் என்ற பெருமையைப் பெற விரும்புகிறேன். 


இவ்வாறு முத்துக்குமார் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “லண்டன், அமெரிக்காவில்கூட ஒரு இந்தியர் சொத்து வாங்க முடிந்த நிலையில், நம் நாட்டிலுள்ள காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது என்றிருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. அதனால் அங்கு சொத்து வாங்கும் ஆவல் எழுந்துள்ளது. காஷ்மீரில் நிலம் நிறைய இருந்தாலும் மக்கள் தொகை குறைவு. அங்கு பிற மாநிலத்தவரும் குடியேற வேண்டும். அப்போதுதான் அங்கு தொழில்வளம் பெருகும். நான் ஒரு வழக்கறிஞராக இருப்பதால், எனது சட்டப்பணியை காஷ்மீரில் தொடர விரும்புகிறேன். அதற்காகவே அங்கு நிலம் வாங்க விரும்புகிறேன்” என்றார்.


Similar News