"விடியும் வரை மக்களை இருளில் வைத்திருப்பதுதான் நீங்க சொன்ன விடியல் ஆட்சியா?" - சீமான் ஆவேசம்
"தி.மு.க அரசின் அலட்சியப் போக்கே தற்போதைய மின் தடைக்கு காரணம் ஆகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக தீவிர மின்வெட்டை தமிழக மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் மின்சாரம் சார்ந்த தொழில்களும் மக்களின் அன்றாட வாழ்வும் பெரும் பாதிப்புக்குள்ளாகிவருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மின்வெட்டு தற்போது மின்வெட்டு ஏற்பட்டிருப்பதாக தமிழக வேதனைப்படுகின்றனர், அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டை எதிர்த்து அரசை விமர்சித்து வருகின்றன.
இதன் வரிசையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக அரசை தீவிரமாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடைக்காலத்தில் அதிகரிக்கும் மின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்க முன்கூட்டியே எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க அரசின் மெத்தனப்போக்கே தற்போதைய மின்தடைக்கு முக்கியக் காரணமாகும்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொடரும் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டு நிலவியது போல், மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு ஏற்பட்டு, தமிழகம் இருளில் மூழ்கும் என்று மக்களிடம் நிலவிய பொதுக்கருத்தினை மெய்ப்பிக்கும் விதமாகத் தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழகத்தில் ஒரு நொடிகூட மின்வெட்டு இருக்காது. தேவையான நிலக்கரியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய மின்சாரத்துறை அமைச்சர், தற்போது மத்திய தொகுப்பிலிருந்து சரிவர நிலக்கரி வரவில்லை என்று காரணம் கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்?