'கதிர் செய்திகளை' திரித்து பயன்படுத்தி கட்சியில் பதவி வாங்க துடியாய் துடிக்கும் SKP கருணா!

Update: 2021-11-09 06:45 GMT

தி.மு.க-வில் கட்சி பதவியையும், தேர்தல் நேரத்தில் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி போன்ற பதவிகளுக்கு போட்டியிட இடம் எதிர்பார்த்து காத்திருக்கும் எஸ்.கே.பி.கருணா என்ற தனியார் கல்லூரி தலைவர், கதிர் செய்திகள் பதிவிட்ட செய்தியை திரித்து தனது அரசியல் லாபத்திற்காக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தி.மு.க ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நற்பெயர் வாங்க வேண்டும், கட்சி மற்றும் தேர்தலில் போட்டியிட பதவி வாங்க வேண்டும் என பலர் முனைப்புடன் செயல்படுகின்றனர். அதில் சிலரோ எப்படியாவது மற்றவர்களை இழுத்து அதன் மூலம் தான் நற்பெயர் வாங்கி தி.மு.க தலைமையிடமோ அல்லது தலைமைக்கு நெருக்கமான லாபியிடமோ மனதில் பதிய வேண்டும் என நேரம் பாராது உழைத்து வருகின்றனர்.

அதில் இணையத்தில் முக்கியமானவர் எஸ்.கே.பி.கருணா, திருவண்ணாமலையில் தனியார் பொறியியல் கல்லூரி நடத்தி வரும் இவர் முழு நேரமாக தி.மு.க ஆதரவாளராகவும், பகுதி நேரமாக கல்லூரியையும் நடத்தி வருகிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இவர் தி.மு.க தலைமை லாபியில் நற்பெயர் வாங்க நேற்றைய கதிர் செய்திகளை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பதிவில் பொய் செய்தி பரப்புவதாக நீண்ட இழை ஒன்றை எழுதியுள்ளார். அதில் முதல்வர் 'ஜெய்பீம்' படம் பார்த்ததை கதிர் செய்திகள் குறிப்பிட்டு பொய் செய்திகள் பரப்புவதாக பதிவிட்டுள்ளார்.

இவரை குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்த போது, "அழகிரி ஆதரவாளராக இருந்த குடும்பம் என்பதால் தற்போதைய ஸ்டாலின் குடும்பத்திற்கு இவர் குடும்பம் மீது பெரிதாக அபிப்ராயம் இல்லை. அதனால் தான் எவ்வளவு மெனக்கிட்டாலும் இவரை தற்போதைய கட்சி தலைமை கண்டுக்கொள்வதே இல்லை. 2014, 2016, 2019, 2021 ஆகிய இரண்டு பாராளுமன்ற தேர்தலிலும், இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் எம்.பி, எம்.எல்.ஏ சீட் கிடைக்குமா என தவமாய் தவமிருந்தார். ஒரு ப்லனும் இல்லை. இருந்தாலும், முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்றுக்கு ஏற்றார் போல் தனது இருப்பை காட்டிக்கொள்ள முயற்சித்து வருகிறார்" என்கிறனர். 

இவரை பற்றி கருத்து தெரிவித்த மூத்த இணைய உடன்பிறப்பு, "பாவம் அவருக்கு கட்சி ஏதும் வேலை கொடுக்காததால் வேறு வழியின்றி ட்விட்டரே கதி என விழுந்து கிடக்கிறார். தி.மு.க-வினருக்குள் ஏதேனும் பஞ்சாயத்து என்றால் வாலண்டியராக வந்து தீர்த்து வைக்கிறேன் பேர்வழி என காமெடி செய்துக் கொண்டு இருக்கிறார். மற்றப்படி இவரை எல்லாம் நாங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை" என எதார்த்த நிலையை பகிர்ந்துக் கொண்டார். 

அதெல்லாம் சரி, அவருக்காகவும், மற்றவர்களுக்காகவும் கதிர் செய்திகள் வெளியிட்ட செய்தியின் தொகுப்பும், காரணமும், விளக்கமும்.

"வானிலை எச்சரிக்கை சமயத்தில் 'ஜெய்பீம்' படம், மழையில் மக்கள் அவஸ்தை படும் நேரத்தில் ஆய்வு நாடகம் - இது விளம்பர அரசு" இந்த தலைப்பில்தான் கதிர் செய்தி வெளியிட்டது. அதில் கன மழை சம்மந்தமான வானிலை நிபுணர்களின் அறிக்கையை கண்டுக்கொள்ளாமல் அன்று வெளியான நடிகர் சூர்யாவின் 'ஜெய்பீம்' படம் பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விடுத்தார். அதே சமயத்தில் கனமழை பற்றிய அறிவிப்பையோ, எச்சரிக்கையையோ முதல்வர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் சென்னை கனமழை பாதிப்பில் இருந்து சற்று தப்பித்திருக்கும் என குறிப்பிட்டிருந்தது.

'ஜெய்பீம்' படம் வெளியான நாள் நவம்பர் 2-ஆம் தேதி, தீபாவளிக்கு இரு தினங்கள் முன்பு. ஆனால் முதல்வர் ஸ்டாலின் படம் பார்த்தது அக்டோபர் 31-ஆம் தேதி. அதனை தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் குறிப்பிட்டு, "பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு!

"நேற்று நண்பர் @Suriya_offl வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள #ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்" என பதிவிட்டார்.

அன்றைய தினம் தமிழகத்தில் வானிலை அறிக்கை பற்றிய எச்சரிக்கை செய்திகளும், நிபுணர்களின் எச்சரிக்கையும் அடுத்த தீபாவளி பண்டிகை தினங்களின் தொடர்ச்சியாக தமிழகத்தில் கன மழை நீடிக்கும் எனவும், அது சாதாரண மழையாக இல்லாமல் 'ரெட் அலர்ட்' எனப்படும் மிக கனமழை எனவும் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருந்தன. சாதாரண மழைக்கே தத்தளிக்கும் சென்னை மிக கனமழைக்கு என்ன செய்யும் என 'விடியல்' முதல்வர் யோசித்திருந்தால் அன்று திரைப்படம் பார்க்க உட்கார மனம் இருக்காது மாறாக சென்னையில் மழை நடவடிக்கை எதிர்கொள்ள என்ன வேண்டும் என அவசர கூட்டம் நடத்தியிருப்பார். இப்படி இரண்டரை மணி நேரத்தை ஒரு முதல்வர் வீணடித்திருக்கமாட்டார். இதைத்தான் கதிர் குறிப்பிட்டிருந்தது.


ஆனால் எப்படியாவது தலைமை லாபியில் பெயர் வாங்கி விட வேண்டுமே என கங்கணம் கட்டிகொண்டு சுற்றும் கல்லூரி நடத்துபவரோ அதனை பொய் பரப்புகிறார்கள் என்கிறார். உங்கள் பதவி ஆசைக்கு கதிர் வேண்டுமா ஐயா? அல்லது உங்கள் கட்சி பணி சிறக்க சென்னை மக்கள் அவஸ்த்தை பட வேண்டுமா ஐயா? அல்லது உங்களை புறக்கணிக்கும் கட்சியை கவனிக்க வைக்க ஒரு கல்லூரி தலைவராகிய நீங்கள் இப்படித்தான் நடந்து கொள்வீரா?

மாணவர்கள் படிக்கும் கல்லூரி நடத்தி வரும் நீங்கள் நாளை உங்கள் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் கடந்து செல்லும் போது "சார் வர்றாருப்பா!" என வணக்கம் வைக்கும்படி நடந்துக் கொள்ளுங்கள். மாறாக "இணைய உ.பி போறாங்க பாரு" என சொல்லும்படி நடக்க மாட்டீர்கள் என நம்புகிறோம் ஐயா.

உங்கள் அரசியல் பிழைப்புக்கு "கதிர் செய்திகளை" திரித்து எழுதி வருவதை எங்கள் ஆசிரியர் குழு சார்பாக கடுமையாக கண்டிக்கின்றோம்.

Similar News